விமானத்தில் வந்து இறங்கிய கணவன்… இலங்கையில் மனைவி இறந்துவிட்டதாக வந்த தகவல்…

இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பில் ரசீனா குக்கடி என்ற பெண் உயிரிழந்த நிலையில் வெளிநாட்டில் வசிக்கும் அவர் கணவர், மற்றும் மகள் ரசீனா குறித்து கண்ணீருடன் பேசியுள்ளனர்.

இலங்கையில் ஈஸ்டர் தினத்தில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 253 பேர் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களில் ரசீனா குக்கடி (60) என்ற பெண்ணும் ஒருவர்.

ரசீனாவின் குடும்பத்தார் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்கள், அவர் இலங்கையில் வளர்ந்த நிலையில் பின்னர் துபாயில் பணிபுரியும் தனது கணவர் அப்துல் காதருடன் அங்கு சென்றுவிட்டார்.

விடுமுறையை கழிக்க கணவருடன் ரசீனா இலங்கைக்கு வந்த நிலையிலேயே குண்டுவெடிப்பில் அவர் உயிரிழந்தார். அதற்கு முன்னர் பணி இருப்பதாக துபாய்க்கு அவர் கணவர் அப்துல் சென்றுவிட்டார்.

இந்நிலையில் துபாயில் இரு தினங்களுக்கு முன்னர் நடந்த துக்கம் அனுசரிக்கும் நினைவேந்தல் நிகழ்ச்சியில் அப்துல் கலந்து கொண்டார்.

அவர் கூறுகையில், ரசீனா இல்லாமல் என் வாழ்க்கை நிச்சயம் பழையபடி இருக்காது. ரசீனா ஒவ்வொரு விடயத்தையும் நேர்த்தியாக செய்வார்.

கடவுளுக்கு அதிகம் பிடித்தவர்களை அவர் சீக்கிரம் தன்னிடம் அழைத்து கொள்வார் என என்னிடம் பலர் சமாதானப்படுத்தினார்கள்.

ஆனால் ரசீனாவுக்கு ஏற்பட்ட பயங்கரமான முடிவுக்கு அது பதில் இல்லை. அவள் மிகவும் சிறப்பு வாய்ந்தவள். பலரின் வாழ்க்கைக்கு அவர் உதவியாக இருந்தார்.

நான் இலங்கையில் இருந்து துபாய்க்கு விமானத்தில் சென்று விமான நிலையத்தில் இறங்கும் சமயத்தில் என் மனைவி மரணம் குறித்து எனக்கு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து மீண்டும் உடனடியாக இலங்கைக்கு புறப்பட்டேன், என் வாழ்க்கையில் மிகவும் கடினமான பயணம் இது தான் என கூறியுள்ளார்.

ரசீனாவின் மகள் பரா கூறுகையில், என் அம்மா தன்னிடம் முரட்டுதனமாக, கோபமாக நடந்து கொள்பவர்களை கூட மன்னித்து விடுவார்.

இசையின் மீது அதிக ஆர்வம் கொண்டவராக அவர் இருந்தார் என கூறியுள்ளார்.