மகளை வீட்டில் பூட்டிவிட்டு சென்ற பெற்றோர்! பின்னர் நடந்த விபரீதம்!

இந்தியாவில் வீட்டில் வைத்து பெற்றோரால் பூட்டப்பட்ட 16 வயது சிறுமி, தீ விபத்தில் வெளியே வரமுடியாமல் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலம் தாதர் புறநகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஷரவானி சவான்(16) என்ற சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறுமியின் பெற்றோர் திருமணத்திற்கு கிளம்பியுள்ளனர்.

அப்போது சிறுமி வீட்டை விட்டு வெளியே எங்கும் செல்லாமல், படிக்க வேண்டும் என்பதற்காக அவரை வீட்டில் ஒரு அறையில் வைத்து பூட்டி விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

ஷரவானி அறையினுள் பூட்டப்பட்டதால் வெளியே வரமுடியாமல் சிக்கித் தவித்துள்ளார். தீ விபத்து குறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் சுமார் 3 மணிநேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர்.

அதனைத் தொடர்ந்து பலத்த தீக்காயங்களுடன் சிறுமி ஷரவானி மீட்கப்பட்டார். உடனடியாக மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்ட நிலையில், பாதி வழியிலேயே சிறுமி இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் இதுதொடர்பாக பொலிசார் விசாரணையை தொடங்கியபோது, சிறுமியின் அறையில் இருந்து மண்ணெண்ணெய் அல்லாத காலி டப்பா ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இது விபத்து தானா? அல்லது வேறு ஏதாவது காரணம் உண்டா என்ற கோணத்தில் பொலிசார் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.