முகமூடியுடன் வந்த நபர்கள்.. இலங்கையில் நடந்த தாக்குதலை நேரில் பார்த்தவர் கூறிய தகவல்

இலங்கையில் இஸ்லாமியர்கள் வாழும் பகுதியில் இரு தினங்களுக்கு முன்னர் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் அப்போது அங்கிருந்த சூழல் குறித்து பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் ஈஸ்டர் தினத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் இஸ்லாமியர்கள் வாழும் பகுதிகளில் இரு தினங்களுக்கு முன்னர் தாக்குதல் நடத்தப்பட்டது.

இலங்கையில் புத்தளம், குருநாகல் மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களின் இஸ்லாமியர்கள் வாழும் சில பகுதிகளிலும் மே 13 அன்று தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட துன்மோதர கிராமத்துக்கு பிபிசி சென்று அங்குள்ள மக்களிடம் பேட்டி எடுத்தது.

நிஷ்தார் என்ற இளைஞர் கூறுகையில், எங்கள் கிராமத்துக்குள் நுழைய குறுக்கு வழிகளை கண்டுபிடித்த முகங்களை மூடிய இளைஞர்கள் அவ்வழியே உள்ளே வந்தனர்.

பின்னர் பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்திய நிலையில், அதனை சூழ்ந்துள்ள வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மீதும் தாக்குதல் நடத்தினார்கள்.

தாக்குதல் நடத்தப்படுவதை அவதானித்து பெண்கள் தங்கள் உயிரை பாதுகாத்துக் கொள்வதற்காக தமது கிராமத்திற்குள் அருகிலுள்ள காடுகளை நோக்கி சென்றதாகவும் அவர் கூறினார்.

இவ்வாறு காடுகளுக்குள் சென்ற பெண்கள், அதிகாலை வேளை வரை காடுகளுக்குள்ளேயே மறைந்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த தாக்குதலில் கட்டடங்கள், வாகனங்கள், வீட்டுத் தோட்டங்கள் உள்ளிட்ட அனைத்து சொத்துகளும் சேதமாக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்ததாகவும் நிஷ்தார் கூறியுள்ளார்.