கிழக்கில் பதிலீடு இன்றிய திடீர் ஆசிரியர் இடமாற்றம்! கல்விச்செயற்பாடுகள் பாதிப்பு

கிழக்கு மாகாணத்தில் இந்த வாரத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் திடீர் ஆசிரிய இடமாற்றத்தையடுத்து தமிழ்ப் பாடசாலைகளின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலையடுத்து கிழக்கு மாகாண ஆளுநரால் விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கமைய இத்திடீர் இடமாற்றம் இடம்பெற்றுவருகிறது.

கல்குடா, பட்டிருப்பு, மட்டக்களப்பு மற்றும் மட்டக்களப்பு மேற்கு வலய தமிழ்ப் பாடசாலைகளில் கடமையாற்றும் 115 முஸ்லிம் பெண் ஆசிரியைகள் இந்த இடமாற்றத்தைப்பெற்று தத்தமது சொந்த இடங்களுக்கு தற்காலிகமாகச் சென்றுள்ளனர்.

இத்தற்காலிக இடமாற்றம் ஜூன் மாதம் 28ம் திகதி வரை வழங்கப்பட்டுள்ளது. இத்தொகை இன்னும் ஓரிரு நாட்களில் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கல்குடா வலயத்திலிருந்து 68 ஆசிரியர்களும், பட்டிருப்பு கல்வி வலயத்திலிருந்து 22 ஆசிரியர்களும், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலிருந்து 16 ஆசிரியர்களும், மட்டக்களப்பு வலயத்திலிருந்து 9 ஆசிரியர்களுமாக 115 ஆசிரியர்களுக்கு தற்காலிக இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக அந்தந்த வலயக்கல்வி பணிப்பாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.

மேற்படி வலயங்களுள் கல்குடா மற்றும் மட்டு.மேற்கு கல்வி வலயங்களில் கடந்தகாலங்களில் பாரிய ஆசிரியர் தட்டுப்பாடு நிலவிவந்த காலகட்டத்தில் இந்த அஆசிரிய இடமாற்றம் தற்போது இடம்பெற்றுள்ளமை மேலும் மிக மோசமான ஆசிரியர் தட்டுப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது.

இது ‘மரத்தால் வீழ்ந்தவனை மாடேறி மிதித்தகதை’ போலாகியிருக்கிறது என அப்பகுதி புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக தமிழ்ப்பாடசாலைகளின் கல்வியில் பாதிப்பை ஏற்படுத்துவதை மையமாகவைத்து இவ்விடமாற்றம் நடைமுறைப்படுத்தப்படுகின்றதா? என்ற கேள்வியையும் அவர்கள் கேட்கிறார்கள்.

இம்முஸ்லிம் ஆசிரியைகள் தங்களின் வசதிக்கேற்ப பாதுகாப்பைக்காட்டி கஸ்டப் பிரதேச பாடசாலைகளிலிருந்து இன்றைய அசாதாரண சூழ்நிலையை காரணம்காட்டி இடமாற்றம் பெற்று வெளியேறி வருகின்றார்கள்.

சமகாலத்தில் பாடசாலைக்கு மாணவர்களின் வரவு குறைவாக இருக்கின்ற நிலையில் இவ்வாறான தற்காலிக இடமாற்றத்தால் மாணவர்களின் கல்வி மேலும் பாதிக்கப்படுகின்றது என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றார்கள்.

இதனால் தொடந்தும் தமிழ் பிரதேச மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுவருகிறது. இந்நிலை நீடித்தால் கல்குடா வலயப் பாடசாலைகளை மூடவேண்டிய துர்ப்பாக்கிய நிலையும் ஏற்படலாம்.

எனவே இயல்பான கற்றல் கற்பித்தல் நடவடிக்கைக்கு மாகாண கல்விநிர்வாகம் ஒத்துழைப்பு வழங்குமாறு பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கங்கள், தமிழ்க் கல்விச் சமூகத்தினர் வேண்டுகோள் விடுத்துவருகின்றனர்.

இதேவேளை, அண்மையில் ஆளுநர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் வெளிமாவட்டங்களில் எந்தப் பாடசாலையில் பணியாற்றும் ஆசிரியர் யாரும் இடமாற்றம் பெறவிரும்பினால் சொந்த இடங்களுக்கு இடமாற்றம் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.