மனிதர்கள் எளிதில் செல்ல முடியாத உலகின் மிக ஆழமான கடல் பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகிலேயே மிக ஆழமான கடல் பகுதி பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள மரியானா அகழி. சுமார் 36 ஆயிரம் அடி ஆழம் கொண்ட இந்த கடல் பகுதியில் சேலஞ்சர் டீப் எனப்படும் மிகப்பெரிய பள்ளம் உள்ளது. மனிதர்களால் அத்தனை எளிதில் இந்த ஆழத்திற்கு சென்றுவிட முடியாது.
இன்று வரை மூன்று பேர் மட்டுமே இந்த ஆழத்திற்கு சென்று ஆய்வு செய்துள்ளனர். 1960ஆம் ஆண்டு டான் வால்ஸ் மற்றும் ஜேக்குவஸ் பிக்கார்ட் ஆகியோர் நீர் மூழ்கி கப்பல் மூலம் இந்த பகுதிக்கு சென்றனர்.
பின்னர் 2012ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் ஜேம்ஸ் கேமரன் மரியானா அகழியின் ஆழமான பகுதிக்கு சென்றார். இவர்களது சாதனையை முறியடிக்கும் வகையில் விக்டர் வெஸ்கோவோ என்பவர் மரியானா அகழியின் மிக ஆழமான பகுதிக்கு நீர்மூழ்கி கப்பல் மூலம் சென்றார்.
ஆழ் கடலில் சென்று ஆய்வு நடத்திய போது பல அரிய வகை உயிரினங்களை விக்டர் கண்டறிந்துள்ளார். இந்த சுவாரஸ்யமான பயணத்தில் விக்டருக்கு காத்திருந்தது ஒரு அதிர்ச்சி.. அரிய உயிரினங்களுக்கு மத்தியில் பிளாஸ்டிக் கழிவுகளும் இருந்ததை அவர் கண்டறிந்துள்ளார்.
மனிதர்களே செல்ல முடியாத பகுதிக்கு மனிதர்கள் உருவாக்கிய பிளாஸ்டிக் கழிவுகள் சென்றுள்ளன. பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கலப்பது குறித்து ஆய்வாளர்கள் தொடர்ச்சியாக எச்சரித்து வருகின்றனர். தற்போது அவை மிக ஆழமான கடல் பகுதி வரை சென்று சேர்ந்துள்ளன. இதனை அலட்சியமாக கருதாமல் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கவும் பிளாஸ்டிக் கழிவுகளை கையாளும் விதம் குறித்தும் புதிய அணுகுமுறையை கையாள வேண்டும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.