மெக்ஸிக்கோ நாட்டில் சுற்றுலாவுக்கு புகழ்பெற்ற டிஜுவானா நகரமே தற்போது உலகின் மிகவும் வன்முறை நிறைந்த நகரம் என பெயர் எடுத்துள்ளது.
டிஜுவானா நகரத்தில் அமைந்துள்ள பிணவறையில் இடம் பற்றாக்குறையால், அங்கு கொண்டுவரப்படும் சடலங்களை தரையில் குவியல் குவியலாக குவித்து வைத்திருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
டிஜுவானா தற்போது உலகின் மிகவும் வன்முறை நிறைந்த நகரம் என பெயர் எடுப்பதற்கு காரணம் அங்குள்ள போதை மருந்து கும்பல்களே என கூறப்படுகிறது.
இந்த நகரில் நாளுக்கு குறைந்தது 6 படுகொலையாவது நடப்பதாக அங்குள்ள அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
குவியலாக குவிக்கப்பட்டுள்ள சடலங்களில் கை கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் டசின் கணக்கில் காணப்படுவதாகவும்,
பெரும்பாலான சடலங்கள் அவர்களின் உறவினர்களால் கூட அடையாளம் காணப்படுவதில் சிரமம் இருப்பதாகவும், போர்க்களத்தில் இருந்து திரும்பியுள்ளது போன்று ஒவ்வொரு சடலமும் கை கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் இருப்பதாக உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
டிஜுவானா நகரில் உள்ள அந்த குறிப்பிட்ட பிணவறையில் கடந்த சில வாரங்களில் மட்டும் 190 சடலங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
ஆனால் இந்த பிணவறையில் 150 சடலங்களை பாதுகாக்கும் வசதி மட்டுமே உள்ளது.
நான்ஸி என்பவர் தமது கணவரின் சடலத்தை கண்டு வாய்விட்டு கதறியுள்ளார். அவரது நிலை மிகவும் கொடூரமாக உள்ளது. வெறும் தரையில் அவரது சடலத்தை காண்கையில் மனம் பதைபதைக்கிறது.
மிகவும் கொடூரமாக கொலை செய்திருக்கிறார்கள், பயமாக இருக்கிறது. உயிருக்கு உத்திரவாதம் இல்லை என்பது கண்கூடாக தெரிகிறது என்றார்.
கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் 2,000 படுகொலைகள் டிஜுவானா நகரில் நடந்தேறியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.