இங்கிலாந்தில் இளம்பெண்ணிடம் காதலை கூறிய இந்தியருக்கு சிறைத்தண்டனை!

இங்கிலாந்தில் இளம்பெண்ணிடம் காதலை கூறிவிட்டு ஒரேநாளில் வெவ்வேறு செல்போன் எண்களில் இருந்து 40 முறை போன் செய்த இந்தியருக்கு 29 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்தியாவை சேர்ந்த ரோகித் சர்மா (28) என்கிற இளைஞர் கடந்த 2017ம் ஆண்டு ஹோட்டல் ஒன்றிற்கு உணவருந்த சென்றுள்ளார். அங்கு அவருக்கு உணவு பரிமாறிய 20 வயது பணிப்பெண் மீது காதல் வயப்பட்டுள்ளார்.

பணி முடிந்ததும் அந்த பெண்ணை பின் தொடர்ந்து சென்றுள்ளார். மறுநாள் தன்னுடைய தந்தையுடன் சென்று அந்த பெண்ணை சந்தித்த ரோகித் சர்மா, திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டுள்ளார்.

அந்த இளம்பெண் உடனே தன்னுடைய வேலையை மாற்றி வேறு இடத்திற்கு சென்றுவிட்டார். ஆனால் ரோகித் சர்மா, அந்த இளம்பெண் வேலை செய்த இடத்தில் இருந்து எப்படியோ அவருடைய செல்போன் என்னை பெற்றுள்ளார்.

அன்றிலிருந்து ரோகித்சர்மாவின் நடவடிக்கை மாறியுள்ளது. போன் அழைப்பு, மெசேஜ், சமூகவலைத்தளத்தின் வாயிலாக மெசேஜ் என அனுப்பிக்கொண்டே இருந்துள்ளார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அந்த இளம்பெண், ரோகித் சர்மா மீது பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் பொலிஸாரும் எச்சரித்து அனுப்பியுள்ளனர். அதன்பிறகும் கூட ரோகித் சர்மா தன்னுடைய சேட்டைகளை குறைத்துக்கொள்ளவில்லை.

அந்த இளம்பெண்ணை தினமும் பின்பற்றுவதோடு, வேலை செய்யும் இடத்தில் நின்றுகொண்டு அவரை கண்காணித்தபடியே இருந்துள்ளார். இதனால் கடந்த ஆண்டு ஜூலை மாதம் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் வெளியில் வந்தார்.

அதன்பிறகு நவம்பர் 5 ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராக தவறி விட்டார். இதற்கிடையில் அந்த இளம்பெண் தன்னுடைய வேலையை விட்டு நின்றதோடு, ரோகித் சர்மாவின் தொல்லையில் இருந்து தப்புவதற்காக அந்த பகுதியை விட்டு வேறு இடத்திற்கு சென்றுள்ளார்.

அவர் எங்கு சென்றார் என்பதை தேடும் முயற்சியிலேயே ரோகித் சர்மா இருந்து வந்துள்ளார். கடந்த மாதம் ரோகித் சர்மாவை பொலிஸார் கைது செய்தனர்.

இந்த நிலையில் அவருடைய வழக்குகளை கேட்டறிந்த நீதிபதி, ரோகித் சர்மாவிற்கு 29 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும், அவருடைய தண்டனைகளும் முடிந்ததும் இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவார் எனவும் கூறி உத்தரவிட்டார்.