வருகிற 19ம் தேதி தமிழகத்தில் 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. மேலும், பாராளுமன்ற தேர்தலின் இறுதி கட்ட வாக்குப்பதிவு நடக்க இருக்கின்றது. இந்நிலையில் அனைத்து கட்சி அரசியல் தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.
தமிழகத்தைப் பொருத்தவரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோர் அவரது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டனர். பிரச்சாரம் செய்ய இன்று இறுதி நாளாக கூறப்பட்டது. இந்நிலையில் அனைத்துக் கட்சியினரும் பரபரப்பாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
இன்று மாலை 6 மணியுடன் அனைத்து கட்சி தலைவர்களும் பிரச்சாரத்தை முடித்து ஓய்வு பெற்றுள்ளனர். களத்தில் மட்டுமல்லாது வாட்ஸ்அப், ஃபேஸ்புக், யூடியூப் போன்ற சமூக வலை தளங்களிலும் அவரவர் கட்சியினரை ஆதரித்து குறும்படங்கள், வீடியோ காணொளிகளை உலவவிட்டு ஆதரவு திரட்டினர்.
பிரச்சாரத்திற்கான காலக்கெடு முடிந்து விட்டதால் அந்தந்த தொகுதியில் இருந்து தலைவர்கள் வெளியேற உத்தரவு போடப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் நடக்க இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில் பணப்பட்டுவாடா செய்ய முயற்சிக்கக் கூடும் என்பதால் தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
பாராளுமன்ற தேர்தல் இடைத்தேர்தல் என ஓயாது பிரச்சாரம் மேற்கொண்டு வந்த அரசியல் தலைவர்கள் இனி சற்று ஒய்வு எடுக்கலாம் என நிம்மதி அடைந்துள்ளதாக தெரிகிறது.