கடந்த ஏப்ரல் மாதம் 28ம் தேதி உடல் அதிகமாக எரிந்த நிலையில் 20 வயதான கீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அவர் தற்கொலை முயற்சியாக தனக்குத் தானே தீ வைத்து கொண்டுள்ளார்.
அவரது வாழ்க்கை ஹாபூரில் தொடங்கி, மொரதாபாத் வழியாக டெல்லியை வந்தடைந்துள்ளது.
மூன்று கணவர்கள், 10 ஆயிரம் ரூபாய் ஒப்பந்தம், மூன்று குழந்தைகள், பாலியல் வல்லுறவு குற்றஞ்சாட்டப்பட்ட 16 பேர் மற்றும் ஒரு தற்கொலை முயற்சி, அதனால் 60 சதவீத தீக்காயங்கள். இந்த பிரச்சனைகளோடு இருக்கும் கீதாவின் உடல்நிலை தற்போது நிலையாக உள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் ஹாபூர் மாவட்டத்தின் ஷாபூர் ஜாட் கிராமத்தில் வாழும் 20 வயதான கீதா, பலமுறை கேட்டுக்கொண்ட பின்னரும் தான் வழங்கிய புகாருக்கு முதல் தகவல் அறிக்கை பதியவில்லை என்று ஹாபூர் காவல்துறையினர் மீது குற்றஞ்சாட்டியுள்ளார். அதனால் விரக்தி அடைந்த அவர் தீ வைத்துக்கொண்டுள்ளார்.
இருப்பினும், இந்த குற்றச்சாட்டுக்களை ஹாபூர் காவல்துறையினர் மறுத்துள்ளனர். இந்த வழக்கு சந்தேகத்திற்குரியது, புலனாய்வில் உள்ளது என்கிறது காவல்துறை.
பாகிஸ்தான் பெண்களுடன் சீன ஆண்கள் திருமணம்: ‘சர்வதேச பாலியல் தொழிலுக்கு ஒரு முக்கிய ஆதாரம்’
இந்த சம்பவத்தை அறிய வந்த டெல்லி பெண்கள் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மலிவால், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திற்கு மே மாதம் 11ம் தேதி கடிதம் எழுதி, இந்த சம்பத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரியிருந்தார்.
இந்த சம்பவத்தோடு தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்வதோடு, முதல் தகவல் அறிக்கை பதிய வேண்டுமெனவும் இந்த கடிதத்தில் அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த கடிதத்திற்கு பின்னர், மே 12ம் தேதி ஹாபூரிலுள்ள பாபுகார் காவல் நிலையத்தில் முதல் தகவல் அளிக்கை பதிவானது. இதில் 16 பேர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.
ஊடக தகவல்களை அடிப்படையாக வைத்து மாநில தலைமை செயலாளரும், காவல்துறை இயக்குநரும், இந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை வழங்க வேண்டுமென இந்திய தேசிய மனித உரிமை ஆணையம் மே 13ம் தேதி உத்தரவிட்டது.
தேசிய பெண்கள் ஆணையமும் இந்த சம்வத்தை கையில் எடுத்துள்ளது. .
ஆனால், இந்த சம்வத்தோடு தொடர்புடைய வேறு பலரும், பல பக்கங்களும் இருக்கத்தான் செய்கின்றன.
கீதா யார்? ஷாபூர் ஜாட் கிராமத்தை வந்தடைந்தது எப்படி?
ஹாபூரிலுள்ள ஷாய்ஸ்புரா கிராமத்தை சேர்ந்த கீதா 14 வயதில் மோனுவை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) திருமணம் செய்துகொண்டார். இந்த முதல் திருமணம் ஓராண்டுதான் நீடித்தது,
தனது மகனோடு திரும்பி வந்த கீதா, சில காலத்திற்கு பின்னர் மோனுவிடம் இருந்து விவாகரத்து பெற்றார்.
அதன் பிறகு, ஷாபூர் ஜாட் கிராமத்தை சேர்ந்த வினோத்திற்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கீதா திருமணம் செய்து வைக்கப்பட்டார்.
தனது தந்தை ராம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 33 வயதான வினோத்திற்கு 10 ஆயிரம் ரூபாய்க்கு தன்னை விற்றுவிட்டதாக கீதா குற்றஞ்சாட்டியுள்ளார்.
“நான் ஒரு தொழிலாளி. மாதம் சுமார் ஆறாயிரம் சம்பாதிக்கிறேன். 10 ஆயிரம் ரூபாய் எனக்கு எப்படி கிடைக்கும்? திருமணம் செய்து கொள்வதற்கு அவரது தந்தைதான் கேட்டுக்கொண்டார்,” என்கிறார் வினோத்.
ஆனால், பாபுகார் காவல்நிலையத்தில் கீதா பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் வினோத்தோடு நடைபெற்ற முறையான திருமணம் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
இருதரப்புக்கு இடையில் பத்திர ஆவணம் ஒன்று எழுதப்பட்டு, கீதா அவரது மகனோடு வினோதிடம் வழங்கப்பட்டதாக இந்த முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டு
16 பேர் மீது பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டு இந்த முதல் தகவல் அறிக்கையில் உள்ளது.
கடந்த ஐந்தாண்டுகளாக 16 பேர் தன்னை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியுள்ளதாக கீதா குற்றஞ்சாட்டியுள்ளார்.
அது கிராமத்தை சேர்ந்த ஒருவரிடம் இருந்து வினோத் பணம் கடன் வாங்கியதாக கீதா தெரிவித்துள்ளார். கணவனும், மனைவியும் எப்படியோ அசலை அடைத்துவிட்டனர். ஆனால், வட்டி கட்டவில்லை.
இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட பணம் கடன் கொடுத்தவர், கீதாவை அச்சுறுத்தியும், மிரட்டியும் பல முறை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.
இவற்றிற்கு மத்தியில் கருத்தரித்த கீதா ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். ஆனால், இதனை மறுக்கின்ற வினோத், இந்த குழந்தை தன்னுடையது என்று கூறுகிறார்.
பாலியல் வல்லுறவு சம்பவங்களும், அவை நடைபெற்ற இடங்களும் மிக துல்லியமாகவும், விரிவாகவும் கீதாவின் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
பல்வேறு வீடுகளில் பணிப்பெண்ணாக கீதா பணிபுரிவது வழக்கம் என்று முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் பலர் இவரை தவறாக நடத்தியுள்ளனர்.
தவறான நடத்தைகளுக்கு உள்ளாக்கப்படுவதை தனது கணவர் வினோத்திடம் தெரிவித்ததாக கீதா கூறுகிறார். அப்போதெல்லாம் கீதாவை அமைதியாக இருக்க கேட்டுக்கொண்ட வினோத், அவர் தெரிவித்த எதற்கும் செவிமடுக்கவில்லை.
ஆனால், வினோத், “கீதாவுக்கு தவறு நடப்பதை அவர் தன்னிடம் சொல்லவில்லை” என்று கூறுகிறார். மாறாக, இந்த குற்றத்தை அவர் கீதா மீது சுமத்துகிறார்.
“தவறு கீதா மீதுதான் உள்ளது. இல்லாவிட்டால், அவர் ஏன் 3 சிறு குழந்தைகளை விட்டுவிட்டு மூன்றாவது நபர் புவனோடு (பெயர் மாற்றப்பட்டுள்ளது செல்ல வேண்டும்?” என்று வினோத் கேள்வி எழுப்பினார்.
கீதா, புவனோடு சென்றுவிட்டதாக வினோத் கூறும் நிலையில், நாங்கள் புவனோடு பேசுகையில், கீதா கூறுவதற்கு யாரும் செவிமடுக்கவில்லை. எனவே, அவர் ஆதரவு அளிக்க முடிவு செய்ததாக தெரிவித்தார்.
மூன்றாவது கணவரும், மொரதாபாத்தும்
முதல் தகவல் அறிக்கையில் புவன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), கீதாவின் தற்போதைய கணவர் அதாவது மூன்றாவது கணவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, கீதாவும், வினோதும் விவாகரத்து செய்து கொண்டார்களா?
புவனிடம் கேட்டபோது, “விவாகரத்து இன்னும் பெறப்படவில்லை. ஆனால், வினோத்தோடு வாழ விரும்பவில்லை என்று கீதா எழுதி கொடுத்துவிட்டார்” என்றார். “எங்களது திருமணத்தை பொறுத்தவரை எங்கள் திருமணம் பத்திர பதிவு செய்துள்ளோம்” என்றும் அவர் கூறினார்.
தனக்கு நடந்தது எல்லாவற்றையும் கீதா தன்னிடம் கூறியதாகவும், அதனை தொடர்ந்து, வேறு யாரும் ஆதரவு அளிக்காவிட்டாலும், கீதாவுக்கு ஆதரவாக நிற்க தான் முடிவு செய்ததாகவும் புவன் கூறினார்.
ஆனால், கீதாவோடு நீங்கள் மொரதாபாத் சென்றது ஏன்?
இந்த கேள்விக்கு பதிலளித்த புவன், “கீதா பற்றி எனது குடும்ப உறுப்பினர்களிடம் பேசினேன். ஆனால், யாரும் எனக்கு ஆதரவு அளிக்கவில்லை. எல்லாரும் எதிர்த்தார்கள்.
பஞ்சாயத்து தலைவரும் உதவவில்லை. இவ்வேளையில், கீதா மிரட்டல்களை எதிர்கொண்டார். அத்தகைய சூழ்நிலை காரணமாக கிராமத்தை விட்டு செல்வது சிறந்தது என்று முடிவு செய்தோம்” என்றார்.
ஒருபுறம், புவனும், கீதாவும் 2008ம் ஆண்டு நவம்பர் 23ம் தேதி தொடங்கி உறவில் இருந்து வந்துள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மறுபுறம், கடந்த ஒன்றரை ஆண்டுகளாகதான் புவனும் கீதாவும் ஒன்றாக சோந்து வாழ்ந்து வருகின்றனர் என்று புவனின் தந்தை தெரிவிக்கிறார்.
தற்கொலை முயற்சி மற்றும் காவல்துறையின் அறிக்கை
புவனும், கீதாவும் மொராதாபாத்தில் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். கீதாவின் மூன்று குழந்தைகளும் ஷாபூர் ஜாட் கிராமத்தில் வினோத்தோடு உள்ளனர்.
“கீதா என்னிடம் நடந்தது எல்லாவற்றையும் தெரிவித்தபோது, இதற்கு நீதி கிடைப்பதற்கு புகார் அளிக்க வேண்டுமென தீர்மானித்தோம்” என்ற புவன் பிபிசியிடம் தெரிவித்தார்.
“பலமுறை காவல்துறையை தொடர்பு கொண்டும், போலீஸார் எங்களை கண்டு கொள்ளவில்லை. 2018ம் ஆண்டு நவம்பர் 23ம் தேதிக்கு பிறகு, காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டுமென கீதா ஏப்ரல் மாதம் வலியுறுத்தினார். புலனாய்வுக்கு பின்னர்தான் முதல் தகவல் அறிக்கை பதியப்படும் என்று போலீஸார் கூறிவிட்டனர். இதனால் அவர் மிகவும் கவலையடைந்தார்” என்று அவர் மேலும் கூறினார்.
“மன ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டிருந்த கீதா, ஏப்ரல் 28ம் தேதி தன்மேல் மண்ணெண்ணைய் ஊற்றி தற்கொலை செய்ய முயன்றார்,” என்று புவன் கூறினார்.
இது தொடர்பாக ஹாபூர் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் யாஷ்வீர் சிங் கூறுகையில், “10 ஆயிரம் ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டதற்கு எந்த சான்றும் இல்லை,” என்று தெரிவித்தார்.
“கீதா தகவல் அளித்துள்ள பல்வேறு பாலியல் வல்லுறவு சம்பவங்களை புலனாய்வு செய்துள்ளோம். எதுவும் இன்னும் நிரூபிக்கப்படவில்லை” என்று கூறினார்.
காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யவில்லை என்று கீதா குற்றஞ்சாட்டுவது பற்றி யாஷ்வீர் சிங்கிடம் நாங்கள் கேட்டபோது, கீதாவுக்கு எதிராகவும் பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கீதாவே பலருக்கு எதிராக புகார்களை பதிவு செய்துள்ளார். புலனாய்வுக்கு பின்னர் இந்த வழக்குகள் போலியென கண்டறிந்துள்ளோம்” என்று தெரிவித்தார்.
இந்த வழக்கு சந்தேகத்திற்குரியதாக இருந்தாலும், இன்னும் புலனாய்வு செய்யப்பட்டு வருகிறது.
கிராமத்தினரின் எதிர்வினை
நாங்கள் ஷாபூர் ஜாட் கிராமத்தை சென்றடைந்தபோது, அந்த கிராமத்தில் ஏறக்குறைய யாரும் இல்லை. திறந்த கூடாரம் ஒன்றில் சிலர் இருந்தனர்.
கீதா-வினோத்-புவன் பிரச்சனை பற்றி அவர்களிடம் கேள்வி கேட்க முயன்றோம்.
முதலில் பேச மறுத்த அவர்கள், தங்களின் அடையாளங்கள் வெளிப்படுத்தப்படாது என்று உறுதி வழங்கிய பின்னர், பேச ஒப்புக்கொண்டனர். மக்கள் பலரின் பார்வையில், கீதா தவறு செய்கிறார்.
அந்த கிரமத்தை சேர்ந்த சில பெண்களும் அங்கிருந்தனர். அவர்களும் கீதாவையே குறைகூறினர். அங்கிருந்த சில பெண்கள், குற்றஞ்சாட்டப்படவர்கள் சிலரின் குடும்பங்களை சேர்ந்தவர்கள்.
அவர்களை பொறுத்தவரை, இந்த பெயர்கள் எல்லாம் தவறாக எழுதப்பட்டுள்ளன. இந்த சம்பவங்களும் பின்னால் இருப்பது பணம்தான் என்றும் சிலர் கூறினர்.
இந்த வழக்கில் விடை காண வேண்டிய பல கேள்விகள் இன்னும் உள்ளன.
ஆனால், உறவுகளுக்கு இடையே மோதல், சட்டமும் சமூகமும், இந்த மூன்று குழந்தைகளின் எதிர்காலம் என்ன? ஆகியவை இந்த வழக்கில் மிக முக்கியமான கேள்விகளாகும்.