இலங்கைக்குள் அமெரிக்க இராணுவத்தை வர விடுவது சரியா, பிழையா என்ற விவாதம் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க இலங்கைக்குள் அமெரிக்க இராணுவம் வந்து விட்டதா என்றதொரு சந்தேகம் நிலவி கொண்டு தான் இருக்கிறது.
இந்த நிலையில் அமெரிக்க இராணுவம் இலங்கையில் பயிற்சி பெறுவது போன்றதொரு புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தால் பல்வேறு சர்ச்சைகளும் எழுந்துள்ளன.
குறித்த புகைப்படத்தால் அமெரிக்க இராணுவம் இலங்கையில் நிலவிய அசாதாரண சூழ்நிலையை பயன்படுத்தி இலங்கைக்குள் நுழைந்து விட்டதா என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது.
அப்படியாயின் ரியர் அத்மிரல் சரத் வீரசேகர, இலங்கையில் அமெரிக்காவின் இராணுவ தளம் ஒன்றை அமைக்க இலங்கை அமெரிக்காவுக்கு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்ட கருத்து உண்மையா என்ற கேள்வியும் எழுகிறது.
அதிலும் குறிப்பாக இராணுவ தளமொன்றை ஸ்தாபிப்பது தொடர்பாக அமெரிக்க தூதரகமும், இலங்கை அரசாங்கமும் பேச்சுவார்த்தை நடத்திய போது, அமெரிக்க இராணுவ முகாமை திருகோணமலையில் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.
வெளிநாட்டு படைகள் களத்தில்? வெலிகந்தை புகையிரத நிலையத்தில் பயங்கரவாத சந்தேகியைக் கைதுசெய்தது யார்?
வெலிகந்தை புகையிரத நிலையத்தில் வைத்து ஒரு தீவிரவாத சந்தேகியை சிறப்பு படைப்பிரிவு ஒன்று கைதுசெய்வது போன்றதான புகைப்படம் வெளியாகியுள்ளது.
யார் கைதுசெய்யப்பட்டார், எப்பொழுது கைதுசெய்யப்பட்டார் என்ற விபரம் இதுவரை தெரியவரவில்லை.
ஆனால் வெளியான புகைப்படங்கள் சில சந்தேகங்களையும், கேள்விகளையும் எழுப்பிவருகின்றன.
அந்தப் புகைப்படத்தில் உள்ள ஆயுதம் தாங்கிய படைப்பிரிவினர் சிறிலங்காவின் படைப்பிரிவினர் அணியும் சீருடைகளை அணியாமல், வித்தியாசமான சீருடைகளை அணிந்திருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது.
அத்தோடு, வித்தியாசமான சீருடையுடன் முகத்தை மறைத்தபடி காணப்படும் இரண்டு படைவீரர்கள் மேற்கத்தேய தேக நிறத்தை உடையர்களாக காட்சி தருகின்றார்கள்.
இவர்கள் யார்?
சிறிலங்கா படையினருக்கு சிறப்பு பயிற்சிகளை வழங்கி வருகின்ற அமெரிக்காவின் ‘சீல்ஸ்’ என்று அழைக்கப்படுகின்ற ஈருடகப் படையணியைச் சேர்ந்தவர்கள் அணிந்தது போன்றதான சீருடையை அந்த படைவீரர்கள் அணிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.