ஆனைமலை- நல்லாறு திட்டத்தில் அதிரடி கிளப்பிய அமைச்சர் – தமிழக மக்களுக்கு இன்ப அதிர்ச்சி..!

ஆனைமலை- நல்லாறு திட்டத்தில் விடுபட்ட பகுதிகளை இணைக்க கழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டத்தில், 60 ஆண்டுகள் கடந்தும் இன்னும் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது ஆனைமலையாறு மற்றும் நல்லாறு பாசனத் திட்டம்.

பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டத்தில் சுமார் 4.50 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த திட்டம் 50 டிஎம்சி தண்ணீர் வரவை எதிர்பார்த்து, கடந்த 1958-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட மகத்தான திட்டமாகும்.

ஆனைமலை குன்றுகளில் உற்பத்தியாகி மேற்கு நோக்கிப் பாய்ந்த நீராறு, சோலையாறு, பரம்பிக்குளம், ஆழியாறு, பெருவாரிப்பள்ளம் ஆகிய ஆறுகள் மூலம் ஆண்டுக்கு 30.50 டிஎம்சி தண்ணீரை எதிர்பார்த்து, அவற்றை கிழக்குப்புறமாக திருப்பி, கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் வறட்சியான பகுதிகள் பாசன வசதி பெறவும், மின் உற்பத்தி செய்யவும் ஏதுவாகத் தொடங்கப்பட்டது இந்த திட்டம்.

தமிழக மற்றும் கேரளா மாநில அரசுகளுக்கு இடையே ஏற்கெனவே செய்துகொண்ட ஒப்பந்தப்படி செயலாக்கப்பட்டு வருகிறது இத்திட்டம். மேற்கண்ட ஒப்பந்தப்படி கேரள மாநிலத்துக்கு ஆண்டுக்கு 19.55 டிஎம்சி தண்ணீர் வழங்கப்படுகிறது.

சோலையாறிலிருந்து 12.30 டிஎம்சி, ஆழியாற்றிலிருந்து 7.25 டிஎம்சி தண்ணீரை ஆண்டுதோறும் கேரளத்துக்கு வழங்க வேண்டும்.

இன்று வரை எவ்வித இடையூறுமின்றி கேரளம் தனக்குரிய பங்கைப் பெற்று வருகிறது. ஆனால், தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய 30.50 டிஎம்சி தண்ணீர், பல்வேறு காரணங்களால் முழுமையாக கிடைப்பதில்லை.

ஆனைமலையாறு அணைத் திட்டத்தை நிறைவேற்றாத காரணத்தால், ஆண்டுதோறும் தமிழகத்துக்கு கிடைக்கவேண்டிய 2.50 டிஎம்சி தண்ணீர் கிடைப்பதில்லை.

அக்டோபர் 1-ம் தேதி முதல் ஜனவரி 31- ம் தேதி வரை சோலையாறு அணையில் இருந்து கிடைக்கும் தண்ணீரை கேரள மாநிலத்துக்கு வழங்குவதால், ஆண்டுக்கு சுமார் 2 டிஎம்சி தண்ணீர் நமக்குக் கிடைப்பதில்லை.

பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம் ஆகிய தொகுப்பணைகளில் இருந்து ஆண்டுக்கு 14 டிஎம்சி தண்ணீரை எதிர்பார்த்ததில், சராசரியாக 10 டிஎம்சி தண்ணீர் மட்டுமே கிடைக்கிறது.

இதுபோன்ற காரணங்களால் தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய 8.50 டிஎம்சி தண்ணீர் கிடைப்பதில்லை. இதனால், பரம்பிக்குளம்- ஆழியாறு பாசனத் திட்டம் விவசாயிகளுக்கு முழுமையாகப் பயனளிக்கவில்லை.

இந்த நிலையில் ஆனைமலை நல்லாறு திட்டம் இப்பகுதிக்கு தேவையான திட்டம் ஆகும். இப்பகுதியில் விடுபட்ட பகுதிகளை இணைக்கவும் கழக அரசு நிச்சயமாக நடவடிக்கை எடுக்கும் என்று அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவையில் பேசிய பொழுது தெரிவித்துள்ளார்.