திருவண்ணாமலை மாவட்டம், செல்வவிநாயகர் நகர் பகுதியை சேர்ந்தவர் சக்கரவர்த்தி. சிவில் என்ஜினீயரான இவருக்கு திருமணமான நிலையில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் இவர், தன்னை மருத்துவர் என்று கூறியும், திருமணம் ஆகாதவர் என்றும் அவருக்கு பல பெயர்களை வைத்து இணையதள திருமண தகவல் மையத்தில் போலியாக பதிவு செய்துள்ளார்.
திருச்சியை சேர்ந்த தாமரைச்செல்வி என்ற 33 வயது நிரம்பிய இளம்பெண் கணவரை இழந்த நிலையில் மருத்துவராக பணிபுரிந்துவந்துள்ளார். தாமரைச்செல்விக்கும் ஒரு பெண் குழந்தை இருந்துள்ளது. இந்தநிலையில் இவரும், இணையதள திருமண தகவல் மையத்தில் பதிவு செய்துள்ளார்.
தான் ஒரு மருத்துவர் என்று சக்கரவர்த்தி இணையதள திருமண தகவல் மையத்தில் பதிவு செய்திருந்ததால் தாமரைச்செல்விக்கு அவர் மீது நம்பிக்கை ஏற்பட்டது. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சக்கரவர்த்தி முதல் திருமணம் செய்ததை மறைத்து, தாமரைச்செல்வியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறினார்.
சக்கரவர்த்தியின் ஆசை வார்த்தையை நம்பிய தாமரைச்செல்வி அவரிடம் நெருங்கி பழகியுள்ளார். இதனையடுத்து லட்சக்கணக்கில் தாமரைச்செல்வியிடம் இருந்து சக்கரவர்த்தி பணம் வாங்கியுள்ளார். ஆனால் அவர் திருமணம் பற்றி எதுவும் பேசாமல் இருந்துள்ளார். இதனால் சக்கரவர்த்தியின் நடவடிக்கையில் தாமரைச்செல்விக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதனையடுத்து சக்கரவர்த்தி பற்றி விசாரித்துள்ளார் தாமைரைச்செல்வி. அதில் அவருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருப்பதும், அவர் போலி மருத்துவர் என்ற விவரமும் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தாமரைச்செல்வி, திருச்சி போலீசாரிடம் புகார் கொடுத்தார். ஆனால், விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் இல்லாததால், மதுரை நீதிமன்ற கிளையில், மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதி, இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாருக்கு உத்தரவிட்டார்.
இதனையடுத்து தனிப்படை போலீசார் திருவண்ணாமலையில் உள்ள சக்கரவர்த்தி வீட்டிற்கு சென்று அங்கிருந்த சக்கரவர்த்தியை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சக்கரவர்த்தி சிறையில் அடைக்கப்பட்டார்.