பாதுகாப்புக்கு மத்தியில் வெசாக் தினத்தை கொண்டாடும் மக்கள்!

நாடளாவிய ரீதியல் பௌத்தர்களினால் வெசாக் பூரணை தினம் இன்று (சனிக்கிழமை) கொண்டாடப்படுகின்றது. அத்தோடு நாளை, நாளை மறுதினமும் வெசாக் தின நிகழ்வுகள் தொடர்ந்தும் இடம்பெறவுள்ளன.

எனினும் நாட்டில் கடந்த மாதம் இடம்பெற்ற அசம்பாவிதங்கள் காரணமாகவும் தற்போது நிலவி வரும் அசாதாரன சூழ்நிலை காரணமாகவும் கோலாகலமாக வெசாக் தினத்தை கொண்டாட வேண்டாமென புத்த சாசன அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது. சமய அனுஷ்டானங்களில் மாத்திரம் ஈடுபடுமாறு வலியுறுத்தியுள்ளது.

அறிவுறுத்தல் விடுக்கப்பட்ட போதிலும் வெசாக் தினத்திற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதை அவதானிக்க கூடியதாகவுள்ளது.

தலைநகர் கொழும்பிலும் வெசாக்கூடுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதோடு, விகாரைகளும் அலங்கரிக்கப்பட்டு காட்சித்தருவதை அவதானிக்க முடிகிறது.

மேலும் இம்முறை வெசாக் தினம் விடுமுறை தினங்களில் வருவதால், எதிர்வரும் 20ஆம்  திகதி திங்கட்கிழமையும் அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மதுபானசாலைகளையும் பூட்டுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. வன்முறைகளை குறைப்பதற்காகவே ஒவ்வொரு வருடமும் இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.