பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர் தற்கொலை: பேராசிரியருக்கு அனுப்பிய மின்னஞ்சல்…

தமிழகத்தை சேர்ந்த, எம்.ஏ. ஆங்கிலம் இறுதி ஆண்டு பயின்று வந்த ரிஷி ஜோஷ்வா என்ற மாணவன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் வெளிமாநிலங்களில் இருந்து படிக்க வரும் மாணவர்களின் தற்கொலை கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் இன்று டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. ஆங்கிலம் இறுதி ஆண்டு பயின்று வந்த தமிழக மாணவர் ரிஷி ஜோஷ்வா என்பவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூக்கில் தொங்கி தற்கொலை செய்த தமிழக மாணவர் ரிஷி ஜோஷ்வா வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்றும் அவர் மன அழுத்தம் காரணமாக வகுப்பறையிலேயே அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் மாணவர் ரிஷி ஜோஷ்வாவின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனை செய்ய டெல்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் மாணவர் ரிஷி ஜோஷ்வாவை நேற்று மாலை முதல் காணவில்லை என கல்லூரி நிர்வாகம் தரப்பில் ஏற்கனவே புகார் செய்யப்பட்டிருப்பதாகவும், தற்கொலை செய்வதற்கு முன் ரிஷி ஜோஷ்வா தன்னுடைய பேராசிரியருக்கு மின்னஞ்சல் அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. அந்த மின்னஞ்சல் அடிப்படையில் இறப்பிற்கான காரணம் குறித்து பொலிசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.