உலகக்கோப்பையில் மிரட்ட காத்திருக்கும் அதிரடி வீரர்கள்!

இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிகளவில் ரன் வேட்டை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்பமான காலநிலை, உலர்ந்த ஆடுகளங்கள் ஆகியவற்றால் இம்முறை இங்கிலாந்து ஆடுகளங்கள் துடுப்பாட்டத்திற்கு சாதகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த வகையில் ஒவ்வொரு அணியிலும் உள்ள வலுவான அதிரடி வீரர்கள் குறித்து இங்கு காண்போம்.

திசார பெரேரா (இலங்கை)

இலங்கை அணியின் ஆல்-ரவுண்டர் வீரரான திசாரா பெரேரா, இக்கட்டான சூழலில் அதிரடியில் மிரட்டக்கூடியவர். இவரது அதிகபட்ச ஸ்கோர் 140 ஆகும். ஸ்ட்ரைக் ரேட் 112.35 ஆகும். இதுவரை 153 போட்டிகளில் இவர் 2147 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.

ஜோஸ் பட்லர் (இங்கிலாந்து)

நடுவரிசை வீரராக களமிறங்கும் ஜோஸ் பட்லர், இறுதிகட்ட ஓவர்களில் சமீபகாலமாக அபாயகரமான துடுப்பாட்ட வீரராக உருவெடுத்துள்ளார். 2015ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கு பிறகு, கடைசி 10 ஓவர்களில் இவரது ஸ்ட்ரைக் ரேட் 181.2 ஆக உள்ளது. இவர் 130 போட்டிகளில் 3,497 ஓட்டங்கள் குவித்துள்ளார்.

ஹர்திக் பாண்ட்யா (இந்தியா)

இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் வீரரான ஹர்திக் பாண்ட்யா, முக்கியமான தருணங்களில் விக்கெட்டுகளை கைப்பற்றி திருப்புமுனையை ஏற்படுத்தக்கூடியவர். அத்துடன் எந்த வகை ஆடுகளங்களிலும் துடுப்பாட்டத்தில் விளாசக்கூடியவர். இதுவரை 45 போட்டிகளில் விளையாடியுள்ள பாண்ட்யா, 731 ஓட்டங்கள் விளாசியுள்ளார். இவரது ஸ்ட்ரைக் ரேட் 116.58 ஆகும்.

ஆந்த்ரே ரஸல் (வெஸ்ட் இண்டீஸ்)

மிரட்டலான வீரராக உருவெடுத்துள்ள ஆந்த்ரே ரஸல், பந்தை நீண்ட தூரம் விளாசக்கூடியவர் திறன் கொண்டவர். சமீபத்தில் நடந்த ஐ.பி.எல் தொடரில், இவரது ஸ்ட்ரைக் ரேட் 204 ஆகும். எனவே உலகக்கோப்பையில் இவரது பேட்டிங் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. இதுவரை 52 ஒருநாள் போட்டிகளில் 998 ஓட்டங்கள் அடித்துள்ள ரஸல், 130.45 என ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார்.

டேவிட் மில்லர் (தென் ஆப்பிரிக்கா)

சமீப காலமாக பெரிய பார்மில் இல்லாத டேவிட் மில்லர், எதிரணியினரின் பந்துவீச்சை துவம்சம் செய்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேகப்பந்து வீச்சில் இவர் தடுமாறினாலும், சுழற்பந்துவீச்சினை அடித்து நொறுக்குவார். இவர் 120 போட்டிகளில் 2,922 ஓட்டங்களுடன், 100.86 ஸ்ட்ரைக் ரேட்டை வைத்துள்ளார்.

காலின் மன்றோ (நியூசிலாந்து)

நியூசிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் வீரரான காலின் மன்றோ, நடுவரிசை அதிரடியாக விளையாடி மிரட்டக் கூடியவர். இவரது பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் 105.52 ஆகும். இவர் 51 போட்டிகளில் 1146 ஓட்டங்கள் குவித்துள்ளார்.

மேக்ஸ்வெல் (அவுஸ்திரேலியா)

அதிரடி ஆட்டக்காரரான மேக்ஸ்வெல் இந்த உலக்கோப்பையில் மிரட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவரது ஸ்ட்ரைக் ரேட் 121.95 ஆகும். இதுவரை 100 ஒருநாள் போட்டிகளில் 2700 ஓட்டங்கள் குவித்துள்ளார்.