இந்த விஷயம் தெரிந்தால் மதுவை தொடவே மாட்டீர்கள்!!

மது அருந்துவதால், 200 வகையான நோய்கள் தாக்குவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது அறிக்கையில், “குடிகார நாடு என்ற பெயரை இந்தியா விரைவிலேயே பெறும். 2030-ம் ஆண்டுக்குள் உலகில் உள்ள வயதுக்கு வந்தோரில் 50 சதவீதம் பேர் குடிகாரர்களாகி இருப்பர்; 23 விழுக்காட்டினரால் மாதத்திற்கு ஒரு முறை குடிக்காமல் இருக்க முடியாது என்ற மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.

மதுவால் ஏற்படும் தீமைகளை 38 ஆண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தி வரும் நான், அதற்கு ஒரே தீர்வு மதுவிலக்கு தான் என்பதையும் அறிவுறுத்தி வருகிறேன். மது குடிப்பதால் சிறிது நேரம் கிடைக்கும் போதை மட்டும் தான் குடிகாரர்களுக்கு பெரிதாக தெரிகிறது.

ஆனால், மது அருந்துவதால் 200 வகையான நோய்கள் தாக்குகின்றன; குடிகாரர்களை நம்பியிருக்கும் குடும்பங்கள் சீரழிகின்றன; களவு முதல் பாலியல் வன்கொடுமை வரை அனைத்து வகையான குற்றங்களும் நிகழ்கின்றன. இந்தத் தீமைகள் எதுவும் குடிக்கு அடிமையானவர்களுக்கு உரைப்பதில்லை. இது தான் என்னை வாட்டும் கவலையாகும்.

பெரும்பான்மையான மாநிலங்கள் மதுவிற்பனையை வருவாய் ஈட்டுவதற்கான வழிமுறையாக மாற்றி இருக்கிறது. வருவாய்க்கு ஆசைப்பட்டு மக்களின் வாழ்க்கையை அரசுகள் பறிக்கக்கூடாது.” என அவர் கூறியுள்ளார்.