எகிப்தில் கிசா பிரமிடுகள் அருகாமையில் சுற்றுலா பயணிகளின் பேருந்து மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த வெடிகுண்டு தாக்குதலானது கிராண்ட் எகிப்திய அருங்காட்சியகம் அருகே என கூறப்படுகிறது.
இதில் சுமார் 16 பேர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. பாதிப்புக்கு உள்ளான பேருந்து கடந்து சென்ற சாலை அருகே அமைக்கப்பட்டிருந்த வேலியில் வெடிகுண்டு பொருத்தப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதுவரை இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்று எந்த அமைப்பும் முன்வரவில்லை. பலமுறை இஸ்லாமிய தீவிரவாதிகள் குழு எகிப்தில் சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் முன்னெடுத்துள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதம் சுற்றுலா பேருந்தை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 3 வியட்நாம் சுற்றுலா பயணிகளும் ஒரு உள்ளூர் நபரும் கொல்லப்பட்டனர்.
கிராண்ட் எகிப்திய அருங்காட்சியகமானது இன்னும் கட்டுமானத்தில் உள்ளது. எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு பொதுமக்களின் பார்வைக்கு திறக்கப்படும் என கூறப்படுகிறது.