பயங்கரவாதிகளால் தலைதுண்டித்து கொல்லப்பட்ட பிரித்தானியரின் மகள் எடுத்துள்ள சபதம்!

சிரியாவில் தலை துண்டித்து கொல்லப்பட்ட தன்னுடைய தந்தையின் உடலை எடுத்து வர, தன்னால் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ய தயார் என அவருடைய மகள் சபதம் எடுத்துள்ளார்.

பிரித்தானியாவை சேர்ந்த டேவிட் ஹைன்ஸ் என்கிற தொழிலாளி கடந்த 2013ம் ஆண்டு காரில் சென்றுகொண்டிருந்த போது, துப்பாக்கி முனையில் ஐஎஸ் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டார்.

இவருடன் சேர்த்து இத்தாலியை சேர்ந்த ஃபெடெரிகோ மோட்கா மற்றும் வேறு 2 பேர் கடத்தப்பட்டனர்.

18 மாதங்கள் கைதிகளாக இருந்த போது பல சித்ரவதைகளை அனுபவித்துள்ளனர்.

பின்னர் 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதம், ஜிகாதி ஜான் என அழைக்கப்படும் முகம்மது எம்வாசியால் பாலைவனம் ஒன்றில் வைத்து தலை துண்டித்து கொல்லப்பட்டார்.

அதேசமயம் இவரோடு சேர்ந்து கைது செய்யப்பட்ட ஃபெடெரிகோ மோட்காவை, 5 மில்லியன் டொலர் கொடுத்து இத்தாலி அரசு மீட்டது.

அதன் பிறகு ஆவணப்படம் ஒன்றில் தோன்றிய ஃபெடெரிகோ மோட்கா, தனக்கும் டேவிட் ஹைன்ஸ்க்கும் இடையில் உள்ள நட்பு மற்றும் அங்கு அனுபவித்த சித்ரவதைகள் குறித்து பேசியிருந்தார்.

இந்த நிலையில் டேவிட் ஹைன்ஸின் மகள் பெத்தானியா (22), சிரியாவில் இருந்து தன்னுடைய தந்தையின் உடலை எடுத்து வருவேன் என கூறியிருப்பதோடு, அதற்காக தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ய தயார் என கூறியுள்ளார்.