வவுனியா நகரில் கடந்த சிலகாலமாக வர்த்தக நிலையங்களில் பெண்கள் மீதான பாலியல் சீண்டல்கள், இரட்டை அர்த்த வார்த்தை பிரயோகங்கள் போன்ற கலாச்சார சீர்கேடான செயற்பாடுகள் தொடர்ந்து வருகின்றதாக சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் பல விமர்சனங்கள் எழுந்து வருகின்றதுடன், முறைப்பாடுகளும், கைதுகளும் இடம்பெற்று வருதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் வவுனியா வர்த்தக சங்கத்தினால் அண்மையில் கடும் கண்டனம் தெரிவித்தும் எச்சரிக்கை விடுத்தும் ஊடக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில்,
கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக வவுனியாவில் உள்ள சில வர்த்தக நிலையங்களில் பெண்கள் மீதான அங்க சேஷ்டைகள், பாலியல் சீண்டல்கள், இரட்டை அர்த்த வார்த்தை பிரயோகங்கள் இடம்பெற்று வருவதாக எமது வர்த்தக சங்கத்திற்கு முறைப்பாடுகள் கிடைக்க பெற்றுள்ளன.
கடந்த இரண்டு தினங்களில் வவுனியா நகரில் உள்ள வர்த்தக நிலையமொன்றின் உரிமையாளரின் மகன் மற்றும் அவருடைய நண்பரான மற்றுமொரு வர்த்தக நிலையத்தின் பணியாளர் இணைந்து பெண்ணொருவர் மீது அங்க சேஷ்டை புரிந்ததாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து அவர்கள் கைது செய்யப்பட்டும் உள்ளனர்.
இவ்வாறான வர்தகர்களையும், வர்த்தக நிலையங்களையும் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும் விதமாக செயற்படும் வர்த்தக நிலையங்களையும் வவுனியா வர்த்தக சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.
இது போன்ற செயற்பாடுகளை எதிர்காலங்களில் இடம்பெறாமல் இருக்க வர்த்தக நிலைய உரிமையாளர்கள் கவனத்தில் கொண்டு தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று வர்த்தக சங்கம் எச்சரிக்கிறது.
தொடர்ந்தும் இவ்வாறான பாலியல் சேஷ்டைகள், இரட்டை அர்த்த வார்த்தைப் பிரயோகங்கள், வர்த்தக நிலைய வாயிலில் நின்று இரட்டை அர்த்தத்தில் வாடிக்கையாளர்களை கூவி அழைப்பது போன்ற விடயங்களிற்கு முற்று முழுதாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
வர்த்தக நிலைய உரிமையாளர்கள் தங்கள் மேலான கவனத்தை இந்த விடயம் தொடர்பாக செலுத்த வேண்டும் என வர்த்தக சங்கம் கேட்டுக்கொள்வதுடன் எதிர்வரும் காலங்களில் இது போன்ற முறைப்பாடுகள் எமக்கு கிடைக்கப்பெறும் பட்சத்தில் தங்களது வர்த்தக நிலையத்திற்கு எதிராக வர்த்தக சங்கம் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கும் என்பதையும் பொது மக்களுக்கு குறித்த வர்த்தக நிலையத்தில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுகிறது என அறிவிக்கப்படும் எனவும் அறியத்தருகிறோம்.
எனவே எதிர்காலங்களில் இவ்வாறான செயற்பாட்டை தவிர்த்து சமூக அக்கறையுடன் செயல்படுமாறும் வர்த்தகர்களுக்கு வவுனியா வர்த்தக சங்கம் அறிவிக்கின்றது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.