சீனாவில் சீரழியும் வடகொரிய பெண்களும் சிறுமிகளும்!

வடகொரியாவில் அடக்குமுறை அல்லது பட்டினியில் இருந்து தப்பிக்க ரகசியமாக வெளியேறும் பெண்கள் மற்றும் சிறுமிகள் சீனாவில் பாலியல் தொழிலுக்கு தள்ளப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

வடகொரியாவில் இருந்து வாழ்வாதாரம் தேடி வெளியேறும் பெண்களில் பெரும்பாலானவர்கள் சீனாவில் பாலியல் தொழிலுக்கு தள்ளப்படுகின்றனர்.

இதில் பலரும் ஒருகட்டத்தில் பாலியல் தொடர்பான நோயால் சீனாவிலேயே மரணமடைவதாகவும், அல்லது பாலியல் துஸ்பிரயோகத்திற்கு இரையாகி கொல்லப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.

வறுமை மற்றும் அடக்குமுறையால் அவதிப்படும் பெண்கள் பலர் சட்டவிரோத கும்பல்களிடம் சிக்குவதாக கூறப்படுகிறது.

1990களில் இருந்து இதுவரை வடகொரிய மக்கள் சுமார் 200,000 பேர் ரகசியமாக வெளியேறியுள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் பெண்கள்.

வடகொரியாவில் இருந்து வெளியேறும் பெண்களில் 60 சதவிகிதம் பேர் பாலியல் தொழிலுக்கு தள்ளப்படுவதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

அதில் பாதி பேர் பாலியல் தொழிலாளிகளாகவும், மூன்றில் ஒருபங்கு பேர் கட்டாய திருமணத்திற்கு உடன்படுவதாகவும், சுமார் 15 விழுக்காடு பெண்கள் இணையதள ஆபாச காட்சிகளுக்காக பயன்படுத்தப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.

பாலியல் தொழிலில் ஈடுபடும் கொரிய நாட்டவர்களால் ஆண்டுக்கு 105 மில்லியன் டொலர் வருவாய் திரட்டப்படுவதாக கூறப்படுகிறது.

பெண்கள் பலர் ஒருமுறைக்கு 4 டொலர் வரை ஈடாக்குவதாகவும் கூறப்படுகிறது. பெரும்பாலும் 12 வயது முதல் 29 வயது வரையான பெண்களை மட்டுமே பாலியல் தொழிலில் ஈடுபடுத்துகின்றனர்.

மட்டுமின்றி ஒரு இரவில் 2 முதல் 4 ஆண்களை வரை சந்திக்க நிர்பந்திக்கின்றனர்.

உணவு, உறைவிடம், தொழில் என அனைத்தும் தருவதாக வாக்களிக்கப்படும் வடகொரிய பெண்கள், சீனா வழியாக தென் கொரியா செல்ல ஆச்சைப்பட்டு சட்டவிரோத கும்பலிடம் சிக்குவதாக தெரியவந்துள்ளது.

சீனர்களின் இந்த போலி சலுகைகளை ஏற்காத சுமார் 18 சதவிகித பெண்கள் இந்த கும்பலால் கடத்தப் படுகின்றனர்.

மட்டுமின்றி கட்டாயத்திருமணம் செய்து கொள்வதும் சீனர்களால் தொழிலாகவே நடத்தப்படுகிறது. தேவைப்படும் ஆண்களுக்கு குறைந்தது 146 டொலர் கட்டணத்தில் பெண்களை விற்பனை செய்கின்றனர்.

விற்கப்படும் பெண்கள், அதிக மக்கள் தொகை இல்லாத சீனாவின் புறநகர் கிராமங்களில் கொண்டு செல்லப்பட்டு அடிமைகளாக பாவிக்கின்றனர்.

பகல் முழுவதும் வயல்வெளியில் வேலை, இரவு கணவருடனோ அல்லது அவரது உறவினருடனோ உறவுக்கு கட்டாயப்படுத்தப்படுவது வாடிக்கை நிகழ்வு என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சீனாவில் வடகொரிய நாட்டவர்கள் அகதிகளாகவே பார்க்கப்படுகின்றனர். சட்டவிரோத கும்பலின் கட்டுப்பாட்டில் சிக்காத வடகொரிய பெண்களை பொலிசாரின் உதவியுடன் நாட்டைவிட்டே வெளியேற்றுகின்றனர்.

இதனால் பெரும்பாலான பெண்கள் அந்த கும்பலின் மிரட்டலுக்கு பயந்து உடன்படுவதாக கூறப்படுகிறது.