ஐஎஸ் தீவிரவாத இயக்கத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் இந்தியாவின் தமிழகத்தில் 10 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.
கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்திற்கு ஆதரவாகச் செயல்பட்ட 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்து 9 பேரைக் கைது செய்து பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதில் 9 பேரும் ஜாமீனில் வெளிவந்தனர். ஒருவர் தலைமறைவாக உள்ளார்.
இவர்கள் தனியாக வாட்ஸ் அப் குரூப் ஆரம்பித்து அதன்மூலம் இயங்கி வந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்தது.
தீவிரவாத இயக்கத்துக்கு ஆதரவாகவும், ஆயுதம் வாங்கவும், ஆயுதப் போராட்டத்துக்கு நிதி திரட்டவும், சிறையில் இருப்பவர்களை விடுவிக்கவும், அரசுக்கு எதிராக தங்களது சித்தாங்களைச் செயல்படுத்தவும் முடிவெடுத்ததாக இவர்கள் தொடர்பில் புகார் எழுந்தது.
இந்த வழக்கில் தொடர்புடையவர்களின் வீடுகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
காட்டுமன்னார்கோவில், சேலம் அம்மாபேட்டை, கீழக்கரை, தேவிப்பட்டினம், முத்துபேட்டை ஆகிய இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
சேலம் ஷேக்தாவுத் வீடு, கீழக்கரை முகமது ரிபாஸ், தேவிப்பட்டினம் அபுபக்கர் சித்திக், முபாரிஸ் அகமது, ரிஸ்வன், அமிது அஸ்பர் ஆகியோரது வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
சேலம் அம்மாபேட்டை, ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினத்தில் 3 இடங்களிலும், கீழக்கரை, திருவாரூர் மாவட்டம் முத்துபேட்டையில் 3 இடங்களிலும் சோதனை நடத்தினர்.
மேற்கண்ட சோதனையில் 3 லேப்டாப், 3 ஹார்ட் டிஸ்க், 16 செல்போன்கள், 8 சிம் கார்டுகள், 2 பென் டிரைவ்கள், 5 மெமரி கார்டுகள், 2 பெரிய கத்திகள் மற்றும் சர்ச்சைக்குரிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக என்.ஐ.ஏ தரப்பு தெரிவித்துள்ளது.