திருவனந்தபுரம் அருகே போத்தன்கோடு வட்டப்பாறை பகுதியை சேர்ந்தவர் வினோத் (35). இவரது மனைவி ராக்கி (26). இவர்களுக்கு திருமணமாகி 6 வயதில் ஒரு மகன் உள்ள நிலையில், கடந்த 12-ந்தேதி வினோத் தனது மனைவி மற்றும் மகனுடன் அந்த பகுதியில் உள்ள ஆலயத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது கணவன், மனைவியிடையே தகராறு ஏற்பட்டதால் இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் சிறிது நேரம் கழித்து ராக்கி அலறும் சத்தம் கேட்டதால் அக்கம், பக்கத்து வீடுகளை சேர்ந்தவர்கள் அங்கு ஓடிச் சென்றனர். அப்போது கழுத்தில் கத்திக்குத்து காயத்துடன் ரத்த வெள்ளத்தில் வினோத் பிணமாக கிடந்தார். மேலும் தன்னுடன் தகராறு செய்த கணவர் வினோத் கத்தியால் தன்னைத்தானே குத்திக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறி ராக்கி கதறி அழுதார். இதனையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வினோத்தின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையில் வினோத்தின் தந்தை ஜோசப் போலீசில் பரபரப்பு புகார் கொடுத்தார். அதில் எனது மகன் வினோத்துக்கும், ராக்கிக்கும் திருமணம் ஆனதில் இருந்து தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு அவர்கள் தனிக்குடித்தனம் சென்று விட்டனர். அதன் பிறகும் அவர்கள் இடையே தகராறு நீடித்ததால், வினோத்தை ராக்கி ஆள் வைத்து தாக்கிய சம்பவமும் நடந்துள்ளது. எனவே எனது மகன் தற்கொலை செய்திருக்க வாய்ப்பு இல்லை. அதில் உள்ள மர்மத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் பிரேத பரிசோதனையின் போது வினோத்தின் கையில் ராக்கியின் தலைமுடி இருந்ததும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் தங்களது விசாரணையை தீவிரப்படுத்திய நிலையில், ராக்கியின் நடவடிக்கையில் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரிடம் மீண்டும் விசாரணை நடத்தியபோது, கணவர் தன்னைத்தானே குத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாகவே போலீசாரிடம் கூறியுள்ளார்.
இதனால் ராக்கியின் 6 வயது மகனிடம் போலீசார் விசாரித்தபோது போலீசாரிடம் தனது மகன் பேசுவதை இடைமறித்து ராக்கி பேசியபடி இருந்தார். இதைத்தொடர்ந்து அந்த சிறுவனை தனியாக அழைத்துச் சென்று விசாரணையை தொடர்ந்தனர். அப்போது வினோத் கொலை செய்யப்பட்ட திடுக்கிடும் தகவல் வெளியானது. ராக்கியும், அவரது காதலன் மனோஜ் ஆகியோர் சேர்ந்து வினோத்தை கொலை தெரிய வந்தது.
வினோத்தின் உறவினரான மனோஜ் அந்த பகுதியில் வசித்து வந்த நிலையில், அடிக்கடி வினோத் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். அப்பொது ராக்கியுடன் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. சம்பவத்தன்று ஆலயத்திற்கு சென்று வந்ததும் வினோத் கடைக்கு சென்று உள்ளார். அப்போது மனோஜ், ராக்கியை பார்ப்பதற்காக அங்கு வந்தபோது, தனது மகனை வீட்டுக்கு வெளியே விளையாடும்படி அனுப்பிய ராக்கி தனது காதலனுடன் தனிமையில் இருந்துள்ளார்.
அப்போது வீட்டிற்கு வந்த வினோத் அந்த காட்சியை நேரில் பார்த்துவிட்டதால், மனோஜ் அங்கிருந்த கத்தியை எடுத்து வினோத் கழுத்தில் குத்தி உள்ளார். கணவர் வினோத் தப்பிவிடாமல் இருக்க அவரது கைகளை ராக்கி பிடித்துக்கொண்டு கொலைக்கு உடந்தையாக இருந்து உள்ளார். இந்த தகவல்களை அந்த சிறுவன் போலீசாரிடம் தெரிவித்தான். இதைத்தொடர்ந்து காதலன் மனோஜை போலீசார் கைது செய்தனர். இந்த கொலை தொடர்பாக ராக்கியிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.