டிவி பார்த்த 5 வயது சிறுமியை தாய் அடித்ததால் படுகாயமடைந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் நித்திய கமலா. இவர், தனது கணவர் பாண்டியன் மற்றும் 5 வயது மகள் லத்திகாஸ்ரீ ஆகியோருடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று (மே 20), வீட்டில் இருந்த லத்திகாஸ்ரீ டிவி பார்த்துகொண்டு
இருந்துள்ளார். இதைப்பார்த்த தாய் நித்திய கமலா, ‘பாடம் படிக்காமல் டிவி பார்க்கிறாயே’ எனக்கூறி சிறுமியை அடித்ததாகத் தெரிகிறது. இதில் படுகாயமடைந்த சிறுமி லத்திகாஸ்ரீ
மயக்கமடைய, உடனடியாக அவரை சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு சிறுமிக்கு முதலுதவி சிகிச்சை அளித்த நிலையில், சிறுமியின் உடல்நிலை மிகவும் மோசமடையவே, மேல் சிகிச்சைக்காக அவரை சேலம் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுமி லத்திகாஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காட்டுப்புத்தூர் போலீசார் நித்திய கமலத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.