தற்கொலை குண்டு தாக்குதல் : கண்ணீர் மல்க அஞ்சலி..!

இலங்கையில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்பட்டு நேற்றுடன் ஒரு மாதம் நிறைவடையும் நிலையில், கொச்சிக்கடை புனித அந்தோணியார் தேவாலத்தில் மக்கள் திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த ஏப்ரல் மாதம் 21ம் தேதி, மூன்று தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள், குடியிருப்பு வளாகம் என மொத்தம் 8 இடங்களில், ஐ.எஸ் தீவிரவாதிகளால் அடுத்தடுத்து தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், உள்நாட்டினர் மற்றும் வெளி நாட்டினர் என 250க்கும் அதிகமான அப்பாவி மக்கள் பரிதாபமாக பலியாகினர். அத்துடன், 350க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து, இன்றுவரை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், மனிதாபிமான மற்ற அந்த மிருகங்கள் தாக்குதல் நடத்தி நேற்றுடன் (மே 21) ஒருமாதம் நிறைவடைகிறது. இதையொட்டி, அன்றைய தினம் உயிர் நீத்தவர்களுக்காக நேற்று இலங்கையில் நாடளாவிய அளவில் பிரார்த்தனை நிகழ்வுகள் இடம்பெற்றன. அந்த வகையில், கொச்சிக்கடை புனித அந்தோணியார் ஆலய வளாகத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு, மெழுகுவர்த்தி ஏற்றி கண்ணீர் மல்க தங்கள் உறவினர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.