ரமலான் முடிந்ததும் சவுதியில் மூன்று அறிஞர்களுக்கு மரண தண்டனை!

ரமலான் முடிந்ததும் சவுதியில் மூன்று அறிஞர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பயங்கரவாதம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டுள்ள ஷேக் சல்மான் அல்-அத்வா, அவத் அல்-குர்னி மற்றும் அலி அல்-ஓமரி ஆகியோருக்கு ரமலான் முடிந்ததும், சவுதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுதொடர்பாக சவூதி அரேபியாவில் இருந்து அறிக்கை எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆனால் Middle East Eye இணையதளம் இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ளது.

அல்-அத்வா என்பவர் சர்வதேச நிபுணத்துவம் வாய்ந்த ஒரு “இஸ்லாமிய சீர்திருத்தவாதி”. அல்-குர்னி ஒரு போதகர், அறிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். அல்-ஓமரி நன்கு அறியப்பட்ட ஒளிபரப்பாளர் ஆவார்.

இவர்கள் மூவரும் 2017 ம் ஆண்டு எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் மனித உரிமைகள் ஆர்வலர்கள் ஆகியோரை இலக்காகக் கொண்ட கைது அலையின் போது கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் மூன்று பேரும் கடந்த மே 1ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். ஆனால் திகதி குறிப்பிடாமலேயே வழக்கை தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சவுதியில் கடந்த ஏப்ரல் 23ம் திகதியன்று ஒரே நாளில் 32 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதன்காரணமாக பல நாடுகளில் இருந்து எதிர்வினைகள் ஆற்றப்பட்டன.

இந்த சம்பவமானது சர்வதேச கண்டனம் எவ்வளவு வலிமையானது என்பதைக் கண்டறிய ஒரு சோதனை பலூனாக பயன்படுத்தப்பட்டது என ஒரு ஆதாரம் தெரிவிக்கிறது.