யூடியூப் பிரபலம் வெளியிட்டுள்ள வீடியோ: கோபத்தில் ஏஞ்சலா கட்சியினர்!

ஜேர்மன் யூடியூப் பிரபலம் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று வைரலாகியுள்ள நிலையில், அது ஆளுங்கட்சியினரை கோபப்படுத்தியுள்ளது.

ஏஞ்சலா மெர்க்கலின் CDU கட்சியினர் Rezo என்னும் யூடியூப் பிரபலம் ஒருவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

அப்படி என்ன செய்தார் Rezo?

Rezo வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஏஞ்சலா கட்சியினர் தவறிவிட்டதாகவும், சீதோஷ்ண மாற்றம், பாதுகாப்பு, அறிவுசார் சொத்துரிமை மற்றும் போதைப்பொருள் கொள்கை ஆகியவை குறித்து நடவடிக்கை எடுக்க தவறி விட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

சனிக்கிழமை அவர் வெளியிட்ட வீடியோவில், ஜேர்மனியின் செல்வம் மற்றும் பாலின வேறுபாடு குறித்து புள்ளி விவரங்களை அவர் வெளியிட்டுள்ளார்.

அரசாங்கம் நமது வாழ்வையும் எதிர்காலத்தையும் அழிக்கிறது என்று கூறியுள்ள அவர், பல வாரங்கள் செலவிட்டு CDU மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான CSU ஆகியவை குறித்து ஆராய்ச்சி செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோ வைரலாகி சுமார் 4 மில்லியன் பேர் அதை பார்த்துள்ளார்கள். ஒரு பக்கம் வீடியோ வைரலாகி வர, மறுபக்கம் ஏஞ்சலாவை தொடர்ந்து கட்சி தலைவராகியுள்ள Annegret Kramp-Karrenbauer முதற்கொண்டு பல அரசியல்வாதிகள் Rezoவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.