நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், தமிழக மக்கள் பா.ஜ.கவுக்கு வாக்களிக்காமல் தவறு செய்துவிட்டதாக, பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இந்திய நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், மோடி இரண்டாவது முறையாக பிரதமராக உள்ளார். தற்போது 300க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பா.ஜ.க முன்னிலை பெற்றுள்ளது.
ஆனால் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மாநிலங்களில் பா.ஜ.க பலத்த அடியை சந்தித்துள்ளது. குறிப்பாக 40 நாடாளுமன்ற தொகுதிகள் கொண்ட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பா.ஜ.க ஒரு தொகுதியில் கூட முன்னிலை வகிக்கவில்லை.
இந்நிலையில் இதுகுறித்து பா.ஜ.கவின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில், ‘தமிழகத்தில் தி.மு.க பெற்றுள்ள வெற்றி பலன் தராது. தமிழக மக்கள் ஊழல் செய்யாத பா.ஜ.கவுக்கு வாக்களிக்காமல் தவறு செய்துவிட்டார்கள்.
பா.ஜ.கவுக்கு ஏன் வாக்களிக்கவில்லை என உணர்வார்கள். மத்தியில் பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வர மக்கள் உணர்ந்து வாக்களித்துள்ளார்கள்’ என தெரிவித்துள்ளார்.