நேரு, இந்திராவுக்கு பிறகு தனிப்பெரும்பாண்மையுடன் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்கும் பிரதமர் என்ற சிறப்பை பிரதமர் மோடி பெற்றுள்ளார்.
இந்தியாவில், 17 ஆவது பாராளுமன்றத்தை தேர்ந்தெடுக்க 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது.
மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் வேலூர் நீங்கலாக 542 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது. இந்த தேர்தலில் 8,049 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தகுதி பெற்ற சுமார் 90 கோடி வாக்காளர்களில் 67 சதவீதம் பேர் வாக்களித்து இருந்தனர்.
நாடு முழுவதும் அமைக்கப்பட்டு இருந்த 4 ஆயிரத்துக்கும் அதிகமான மையங்களில் பலத்த பாதுகாப்புடன் நேற்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மொத்தம் உள்ள 542 தொகுதிகளில் 349 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது.
இதில் பாஜக மட்டும் 302 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பெற்றது. மத்தியில் ஆட்சி அமைக்க குறைந்த பட்சம் 272 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. பாஜக அதைவிட கூடுதல் இடங்கள் கிடைத்து உள்ளன.
குஜராத், இமாசலபிரதேசம், உத்தரகாண்ட், அரியானா மாநிலங்களிலும் மற்றும் தலைநகர் டெல்லியிலும் பாரதீய ஜனதா அத்தனை தொகுதிகளையும் கைப்பற்றியது வரலாற்று சாதனை படைத்தது.
இதனை தொடர்ந்து வருகின்ற 26 ஆம் தேதி நடைபெறும் விழாவில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி, அதிகாரபூர்வமாக மீண்டும் பிரதமர் பதவியேற்கிறார்.