குண்டுவெடிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற பிரக்யா சிங் தாகுர் என்ற பெண் 3 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க சார்பில் வெற்றி பெற்றுள்ளார்.
மக்களவை தேர்தலில் மத்திய பிரதேச மாநிலம் போபால் தொகுதியில் பாஜக சார்பில் பிரக்யா சிங் தாகுர் என்ற பெண் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.
அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் திக்விஜய் சிங் நிறுத்தப்பட்டார்.
நேற்று தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் தொடக்கம் முதலேயே பிரக்யா முன்னிலை வகித்தார்.
இறுதியில் அவர் 3,64,822 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பிரக்யா 8,66,482 வாக்குகள் பெற்ற நிலையில் திக்விஜய் சிங் 5,01,660 வாக்குகள் பெற்றார்.
பிரக்யா கடந்த 2008ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் குஜராத் மற்றும் மகாராஷ்டராவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் முக்கிய குற்றவாளி என நீதிமன்றத்தால் தண்டனை பெற்றவராவார். இந்த குண்டுவெடிப்பில் 10 பேர் உயிரிழந்தனர்.
பின்னர் அவர் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியில் வந்தார்.
சர்ச்சைக்கு பெயர் போனவரான பிரக்யா மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது, போராடிய உயிரிழந்த வீரர் ஹேம்ந்த் கட்கரே என்னுடைய சாபத்தின் காரணமாகதான் உயிரிழந்தார் என்று பேசியது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அதே போல கமல்ஹாசன் கோட்சேவை தீவிரவாதி என கூறியதற்கு கருத்து தெரிவித்த பிரக்யா, கோட்சே ஒரு தேசபக்தர் என்றதும் பெரும் சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.