நாட்ரி டாம் தேவாலயம் முற்றிலும் இடிந்து விழும் அபாயம்!

பாரீஸில் மணிக்கு 55 மைல் வேகத்தில் காற்று வீசினால் நாட்ரி டாம் தேவாலயம் முற்றிலும் இடிந்து விழும் அபாயம் இருப்பதாக பொறியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி உலகப்புகழ் பெற்ற தேவாலயம் தீப்பற்றி எரிந்ததைக் கண்டு உலகமே கண்ணீர் வடித்தது.

400க்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடியும், விரைந்து பரவிய தீ, கூரைப்பகுதி முழுவதையும் ஆக்கிரமித்ததில் மரச்சட்டங்கள் முழுவதும் எரிந்து அதன் கீழ் அமைந்துள்ள கவிகை மாடத்தின்மீது (vault) விழுந்தது.

மாடம் வலுவிழந்துள்ளதால் சுவர்கள் பலவீனமடைந்துள்ளதாக தெரிவித்துள்ள பொறியாளர்கள், சீதோஷ்ண நிலை மோசமானால் சுவர்களும் இடிந்து விழும் அபாயம் உள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

Versailles பல்கலைக்கழகத்தில் பொறியாளராக இருக்கும் Paolo Vannucci என்பவர், மணிக்கு 55 மைல் வேகத்தில் காற்று வீசினாலே மொத்த கட்டிடமும் இடிந்து விழும் அபாயம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

தீப்பிடிப்பதற்குமுன் மணிக்கு 136 மைல் வேகத்தில் காற்று வீசினாலும் தாக்குப்பிடிக்கும் அளவிற்கு தேவாலயம் வலிமையாக இருந்துள்ளது.

ஐந்தே ஆண்டுகளில் மீண்டும் தேவாலயத்தை கட்டி எழுப்பும் இமானுவல் மேக்ரானின் திட்டம் இதனால் தள்ளிப்போகலாம் என தெரிகிறது.

தீயில் முற்றிலும் அழிந்துபோன தேவாலய கோபுரமும் கட்டிடத்திற்கு வலிமையைக் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.