வலி சுமந்து வரும் வா தமிழா!

முள்ளிவாய்க்கால் பேரவலம் இடம்பெற்று 10 ஆண்டினை முன்னிட்டு கடந்த 18ஆம் திகதி கனடாவில் வெளியிடப்பட்ட ஈழத்துக் கலைஞர்கள் படைத்த 10 நிமிட வா தமிழா காணொளி முள்ளிவாய்க்கால் பேரவலத்தை வெளிப்படுத்தியுள்ளதென கலைஞர் மாணிக்கம் ஜெகன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர்,

படைப்பாளிகள் உலகம் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக ஈழத்திறமைகளை வெளிக்கொண்டு வருவதில் மிகுந்த பிரையாசப்பட்டு கொண்டிருக்கின்றது.

படைப்பாளிகள் உலகத்தின் நிறுவுனரான ஐங்கரன் கதிர்காமநாதன் சொந்த நிதியிலிருந்து இவ்வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றார். படைப்புலகின் கர்த்தாக்கள் தங்களுடைய படைப்புக்களை வெளியிட முடியாத பொருளாதார நெருக்கடியிலிருக்கும் போது அவருடைய முதல் படைப்பை ஈழத்திற்குத் தேவையான படைப்புலக வசதியினை படைப்பாளிகள் உலகத்தின் சார்பாக மேற்கொண்டு வருகின்றார்.

இதுவரையில் 70இற்கு மேற்பட்ட கலை இலக்கியப் படைப்புக்கள், 20இற்கும் மேற்பட்ட காணொளி குறும் திரைப்படங்கள், மூன்று திரைப்படங்கள் இவ்வாறான விடயங்களை சொந்த நிதியிலிருந்து மேற்கொண்டுள்ளார்.

படைப்பாளிகளுக்கு உதவி செய்வதனூடாக தொடர்ந்தும் இவ்வாறான படைப்புக்களை படைக்க வேண்டும் என்பது தான் படைப்பாளிகள் உலகத்தின் நோக்கமாக இருக்கின்றது.

ஆனால் இன்று வரையும் மூன்று படைப்பாளிகள் தான் அடுத்த படைப்பை படைத்திருக்கின்றார்கள் என்ற கவலையான விடயத்தையும் தெரிவிக்க வேண்டியுள்ளது.

இவ்வாறான படைப்புகளுக்காக தான் கடந்த 5 வருடங்களாக படைப்பாளிகள் உலகம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். அந்தவகையில் வா தமிழா காணொளி பாடலைத் தந்த இயக்குநர் செல்வி மிதுனாவினுடைய குழுவினருக்கு படைப்பாளிகள் உலகத்தின் சார்பில் நன்றிகள்.

இப்படைப்பின் நோக்கம் மக்கள் பட்ட அந்த வலி துன்பம் இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது.

கடந்த 2009 ஆண்டு ஏற்பட்ட வலியல்ல இந்த வலி இன்றும் கூட வடக்குப் பகுதியில் தொடர்ந்து நிலைகொண்டுள்ளது என்ற கசப்பான உண்மையை இந்தப் படைப்பினூடாக நாங்கள் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இந்த வலியைச் சுமந்த மக்களுக்கான ஒரு தீர்வை நிம்மதியான சந்தோசமான ஒரு ஏது நிலையை எல்லோரும் உருவாக்க வேண்டும். படைப்பாளிகள் என்ற வகையில் படைப்பாளிகளின் இந்த வலியை படைப்பு ஒரு யதார்த்தமாக இருக்க வேண்டும் அந்த மக்களின் வாழ்க்கையையைப் பிரதிப்பலிக்க வேண்டும்.

இந்தவகையில் வா தமிழா காணொளி அதனைச் செய்திருக்கின்றது என்பதை பெருமை கொள்ள வைக்கின்றது. என்று தெரிவித்துள்ளார்.

வா தமிழா காணொளி வெளியீடு குறித்து இயக்குநர் செல்வி மிதுனா கருத்துத் தெரிவிக்கும் போது,

வா தமிழா இப்பாடலில் நான் ஒரு இயக்குநராக இருப்பதில் பெருமையடைகின்றேன். கர்வம் கொள்கின்றேன். இவ்வாறான ஒரு பாடலை இயக்கி உருவாக்கியதை நினைத்து மட்டுமல்லாது ஐயங்கரன் கதிர்காமநாதன் தயாரித்திருக்கின்றார், பாடலை எழுதியுள்ளார் மாணிக்கம் ஜெகன், இசையமைப்பாளர் பத்மயன் சிவா, பாடலைப் பாடியவர்கள் மாணிக்கம் ஜெகன், பத்மயன் சிவா, கோகிலன், சிவானு, இப்பாடலுக்காக அதிகமாக உழைத்தவர்கள் சஞ்சய், யூட் ஜெனுசன், சஜீர், இப்பாடல் உருவாகுவதற்கு முக்கிய காரணமாக இருந்துள்ளார்கள்.

கலை இயக்குநராக சஞ்சை, ஜினு பணியாற்றியிருக்கின்றார்கள். இப்பாடல் இன்று நல்ல ஒரு நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது என்றால் பலமான ஒரு அணி தான் காரணம். முக்கியமாக மூங்கிலாறு மக்கள் இப்பாடலில் சுமார் 150இற்கும் மேற்பட்டவர்கள் நடித்திருக்கின்றார்கள்.

நடிகர்கள் அனைவரும் உணர்வு பூர்வமாக பணியாற்றியுள்ளார்கள். இப்பாடலில் நியூட்டன், புவி, சஞ்சை, கபிசான், ஜினோ, வாணி ஆகியோர் நடிகர்களாக நடித்துள்ளார்கள். நடித்தது என்று சொல்வதை விட இப்பாடலில் வாழ்ந்திருக்கின்றார்கள் என்று சொல்வது பொருத்தமாக உள்ளது. எமது மக்களின் வலியை மையமாக வைத்துத்தான் இப்பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தில் பட்ட வேதனை வலி, துன்பம், போராட்டம் முடிவுற்ற பிற்பாடு எமது மக்கள் படும் வேதனை அவற்றை மையாக வைத்துத் தான் இப்பாடலை உருவாக்கியுள்ளோம்.

நாங்கள் எதிர்பார்த்த வரவு மக்களிடமிருந்து கிடைத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.