மேற்கு வங்க மாநிலத்தில் மாப்பிள்ளைக்கு மணப்பெண் வீட்டார் கொடுத்துள்ள வரதட்சணையை பார்த்து அனைவரும் ஆச்சர்யமடைந்துள்ளனர்.
வரதட்சணை கொடுப்பது என்கிற பெரும் பிரச்சனையானது இந்தியாவில் பல ஆண்டுகளாகாவே இருந்து வருகிறது.
பெண் வீட்டார் வரதட்சணை கொடுக்க தவறி விட்டால், தாலி காட்டும் கடைசி நேரத்தில் கூட மணமகன் திருமணத்தை நிறுத்துவிடும் கொடூரமும் ஆங்காங்கே அரங்கேறிக்கொண்டு தான் இருக்கிறது.
ஆனால் இதற்கு அப்படியே மாறாக மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு திருமண சம்பவம் நடந்துள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த சூர்யங்கட்டா பாரீக் (30) என்கிற பள்ளி ஆசிரியர், வரதட்சணை எதுவும் வாங்க மாட்டேன் என தன்னுடைய வருங்கால மனைவியின் வீட்டாரிடம் கண்டிப்பாக கூறியுள்ளார்.
இருப்பினும் திருமண நாளில் மணமகள் பிரியங்கா பெஜ்ஜுவின் கழுத்தில் தாலி காட்டும் சமயத்தில் அங்கிருந்த புத்தக குவியலை பார்த்த மணமகன் பெரும் ஆச்சர்யமடைந்துள்ளார்.
மணமகன் வரதட்சணையை ஏற்க மறுத்ததற்காக ரூ.1 லட்சம் மதிப்பிலான 1000 புத்தகங்களை மணமகள் பரிசாக வழங்கியுள்ளார்.
மணமகன் புத்தகம் படிப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர் என்பதால், மணமகளின் வீட்டார் அவரை ஆச்சர்யப்படுத்த திட்டமிட்டுள்ளனர். “அறிவு செல்வத்தை தவிர பெரிய பரிசொன்றும் இவ்வுலகில் இல்லை” என்பதால் புத்தகங்களை வாங்கி கொடுத்ததாக பெண் வீட்டார் கூறியுள்ளனர்.