கலவரபூமியான சிறை! 29 பேர் பலி

வெனிசுலாவில் சிறைச்சாலையில் நடந்த கலவரத்தில் 29 கைதிகள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

வெனிசுலா நாட்டின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள அகேரிகுவா நகரின் சிறைச்சாலையில் 250 கைதிகள் இருக்க முடியும். ஆனால், அந்த சிறையில் 540க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கைதிகளை காண பார்வையாளர்கள் சிலர் வந்துள்ளனர். அவர்களை அங்குள்ள கைதிகள் பணயக் கைதிகளாக பிடித்து வைத்துக்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து, தகவல் அறிந்து கைதிகள் பிடித்து வைத்துக் கொண்டவர்களை மீட்க சிறப்புப்படை பொலிசார் விரைந்தனர். அப்போது கைதிகள் தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் பொலிசாரை நோக்கி சுட்டனர்.

பதிலுக்கு பொலிசாரும் துப்பாக்கிச்சூடு நடத்திய நிலையில், கையெறி குண்டுகளும் வீசப்பட்டதால் சிறை கலவர பூமியானது. இதில் 29 கைதிகள் கொல்லப்பட்டதுடன், 20க்கும் மேற்பட்ட பொலிசார் படுகாயமடைந்தனர்.

கலவரத்தை தூண்டிய கைதிகளின் தலைவன் என்று கூறப்படும் வில்பிரடோ ரமோஸ் என்பவனும் கொல்லப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் படுகாயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு முன்பு 2017ஆம் ஆண்டு அமஸோனாஸ் மாநில சிறையில் நடந்த கலவரத்தில் 37 கைதிகள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.