மும்பையில் சாதி பெயரை சொல்லி சக மருத்துவர்கள் சித்ரவதை செய்ததால், அவமானம் தாங்காமல் இளம் பெண் மருத்துவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் உள்ள தீபவாலா தேசிய மருத்துவ கல்லூரியில் பயின்று வரும் பயல் தத்வி (26) என்கிற இளம் பெண் மருத்துவர் கடந்த 22ம் திகதியன்று தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
அன்றைய தினம் காலை நேரத்தில் இரண்டு அறுவை சிகிச்சையை முடித்துவிட்டு நேரே விடுதிக்கு சென்ற பயல், நீண்ட நேரம் கதவை திறக்காமல் இருந்துள்ளார். 4 மணி நேரம் கழித்து தான், அவர் தூக்கில் தொங்குவதை மற்றவர்கள் பார்த்துள்ளனர்.
உடனடியாக மீட்கப்பட்ட பயல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனேவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் பயல் தத்விவியின் தாய் அபேடா தத்வி, தற்கொலைக்கான காரணம் குறித்து பேசியுள்ளார்.
என்னுடைய மகள் இடஒதுக்கீட்டின் மூலமாக தான் மருத்துவ சீட்டு பெற்றார். அதனை வைத்து மூன்று மூத்த பெண் மருத்துவர்கள் சித்ரவதை செய்வதாக எங்களிடம் கூறினாள். நாங்களும் அவர்கள் தங்கியிருக்கும் விடுதி பாதுகாப்பாளரிடம் புகார் அளித்தோம்.
அவரும் அந்த மூன்று பேரை அழைத்து இனிமேல் இதுபோன்று நடந்துகொள்ள வேண்டாம் என அறிவுறுத்தினார்.
மே மாதம் 22ம் திகதியன்று மதியம் நான் என்னுடைய மகளுக்கு போன் செய்தேன். இன்னும் அவளுடைய சீனியர்கள் சாதி பெயரை சொல்லி சித்ரவதை செய்வதாக என்னிடம் வேதனை தெரிவித்தாள்.
நானும் தந்தையும் உடனடியாக மும்பைக்கு கிளம்பி வந்து, மருத்துவமனை நிர்வாகம் மற்றும் பொலிசாரிடம் புகார் கொடுப்பதாக அவளிடம் கூறினேன்.
ஆனால் அவள் சித்திரவதையை தாங்கிக்கொள்ள முடியவில்லை என்று கூறிவிட்டு போனை வைத்துவிட்டாள் என கூறியுள்ளார்.
மேலும், நாங்கள் புகார் கொடுத்தபோதே நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் எங்களுடைய மகள் இந்நேரம் உயிருடன் இருந்திருப்பார் என கண்ணீர் மல்க பேசியுள்ளார்.
பயலின் தந்தை சலீம் கூறுகையில், முதல் ஆறு மாதங்கள் நன்றாக இருந்தன. சில வார்த்தைகள் இருவருக்குள்ளும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
டிசம்பர் 2018-ல் நடந்தவை பற்றி எங்களிடம் பயல் கூறினாள். அதனை உடனே பயலின் கணவர் சல்மான் கவனத்திற்கு கொண்டு சென்றோம். இதுபோன்ற விடயங்கள் நடப்பது சகஜம். அதனை புறக்கணிக்குமாறு அவர் கூறியதாக தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவமானது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், மருத்துவர்கள் ஹேமா அஹுஜா, பக்தி மேஹார் மற்றும் அன்கிதா கந்தெல்வால் ஆகியோர் மீது பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.