மதுரையில் வீட்டினுள் உறங்கிக்கொண்டிருந்த ரவுடியின் தலையை மர்ம நபர்கள் தனியாக வெட்டி எடுத்து சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையை சேர்ந்த சவுந்தரபாண்டியன் (43) என்பவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி உள்பட 18 வழக்குகள் உள்ளன.
சமீபத்தில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த சவுந்தரபாண்டியன், நேற்று சிவகங்கையில் இருந்து மதுரையில் உள்ள தன்னுடைய அத்தையின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு மதிய உணவு சாப்பிட்ட பின், அறையில் படுத்து உறங்கிக்கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென வந்த மர்ம நபர்கள் 4 பேர், சரமாரியாக சவுந்தரபாண்டியனை வெட்டியுள்ளனர்.
தடுக்க முயன்ற மாமன் லோகநாதனையும் அரிவாளால் வெட்டியுள்ளனர். பின்னர் சவுந்தரபாண்டியனின் தலையை துண்டாக வெட்டி எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பியுள்ளனர்.
இந்த சம்பவம் அறிந்து வந்த பொலிஸார் மோப்ப நாயின் உதவியுடன், தப்பியோடிய மர்ம நபர்கள் மற்றும் எடுத்து சென்ற தலையை தீவிரமாக தேட ஆரம்பித்தனர்.
மாலை 6 மணியளவில் ரயில்பாலத்தின் அருகே சாக்குமூட்டையில் இருந்து தலையை கண்டெடுத்தனர்.
பின்னர் இதுகுறித்து பொலிஸார் கூறுகையில், கடந்த 2016ம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் நேரு பாண்டி என்பவர் உட்பட இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சவுந்தரபாண்டியன் சமீபத்தில் தான் ஜாமீனில் வெளியில் வந்தான். சவுந்தரபாண்டியனுக்கு சிவகங்கை மற்றும் நெல்லையில் இரண்டு மனைவிகள் இருப்பதால், 2 இடத்திலும் மாறி மாறி வசித்து வந்தான்.
நேற்றைய தினம் சிவகங்கையில் இருந்து மதுரைக்கு வருவதை, நேரு பாண்டியின் உறவினர்கள் கண்காணித்துள்ளனர்.
இந்த நிலையில், சவுந்தர பாண்டியனின் இருப்பிடத்தை தெரிந்துகொண்ட கணேசனின் ஆட்கள் திடீரென வீட்டிற்குள் புகுந்து கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.