இந்தியாவை பதம் பார்த்த நியூசிலாந்து அணி!

இந்தியாவிற்கு எதிரான உலகக்கிண்ண பயிற்சி ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.

உலகக்கிண்ண தொடருக்கு முன்னதாக நடைபெற்று வரும் பயிற்சி ஆட்டத்தில், இந்தியா – நியூசிலாந்து அணிகள் இன்று மோதின.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய இந்திய அணியின் தவான் 2(7), ரோகித்சர்மா 2(6) வந்த வேகத்திற்கு நடையை காட்டினர்.

இதனால் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. அடுத்து வந்த வீரர்களும் வந்த வேகத்திற்கு பெவிலியன் திரும்ப ஆரம்பித்தனர்.

இதனால் இந்திய அணி 39.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 179 ரன்களை குவித்தது.

இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 54 ரன்களை குவித்திருந்தார். நியூசிலாந்து அணியில் ட்ரென்ட் போல்ட் 4 விக்கெட்டுகளையும், ஜேம்ஸ் நீஷம் 3 விக்கெட்டுகளையும், டிம் சவுதி, கொலின் டி கிராண்ட்ஹாம், லாக்கி பெர்குசன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர் கொலின் மன்ரோ 4 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார்.

இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், அடுத்து வந்த வீரர்கள் சிறப்பாக விளையாடியதால் 37.1 ஓவர்களுக்கு 180 ரன்களை குவித்து நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.

நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக ராஸ் டெய்லர் 71 ரன்களும், அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் 67 ரன்களும் எடுத்திருந்தனர்.