அடுத்தடுத்து 3 இடங்களில் குண்டு வெடிப்பு!

நேபாளம் நாட்டில் அடுத்தடுத்து 3 இடங்களில் நிகழ்ந்துள்ள குண்டுவெடிப்பு சம்பவத்தில் 3 பேர் பலியாகியிருப்பதோடு, 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

நேபாளத்தின் தலைநகரம் காத்மாண்டூவின் சுகதாரா, கத்தெட்குலோ மற்றும் நாகதுங்க ஆகிய மூன்று பகுதியில் இன்று குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக பொலிஸார் உறுதி படுத்தியுள்ளனர்.

அதேசமயம் அந்நாட்டு இராணுவம் கொட்டேஷ்வோர், சாட்கோடோ, குவர்க்கோ மற்றும் லங்காங்கல் ஆகிய நான்கு இடங்களில் இருந்த சந்தேகத்திற்குரிய பாக்கெட்டுகளை அப்புறப்படுத்தியுள்ளது.

இந்த குண்டுவெடிப்பில் 3 பேர் உயிரிழந்திருப்பதோடு, ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து பொலிஸார் கூறுகையில், முதலில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததாகவே நாங்கள் கருதினோம். அதன் பின்னர் தான் அவை குண்டு வெடிப்பு என்பது தெரியவந்தது. வீட்டில் வைத்து தயாரித்து கொண்டிருந்த போது தான் அவை வெடித்து சிதறியிருக்கிறது.

இந்த சம்பவத்திற்கு பின்னால், நேத்ரா பிக்ராம் சந்த் தலைமையிலான முன்னாள் மாவோயிஸ்டுகளின் பிரிவினர் குழு இருப்பதாக சந்தேகிக்கிறோம். இரண்டு குண்டுவெடிப்பில் இருந்து துண்டு பிரசுரங்களை நாங்கள் கைப்பற்றியுள்ளோம்.

இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர் என தெரிவித்துள்ளனர்.