முகத்தில் 14 தையல்களுடன் திருமணத்திற்கு வந்த மாப்பிள்ளை!

இங்கிலாந்தில் தன்னுடைய திருமணத்தன்று முகத்தில் 14 தையல்களுடன் வந்த மாப்பிள்ளையை பார்த்து மணமகள் அதிர்ச்சியடைந்துள்ளார்.

இங்கிலாந்தை சேர்ந்த முன்னாள் பொலிஸாரான ஸ்காட் ரிச்சர்ட்ஸ் (31), தன்னுடைய திருமணத்திற்கு முன்தினம் இரவு நண்பர்களுடன் மது விருந்திற்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கு வந்த டெய்லர் ப்ளம்ரிட்ஜ் என்கிற நபர், நானும் உங்கள் குழுவுடன் கலந்துகொள்ளலாமா என கேட்டுள்ளார்.

ஸ்காட் அதற்கு சம்மதம் கூறியதும், மது அருந்துவதை போல அமர்ந்த டெய்லர், அவர்களின் பர்ஸ் மற்றும் பணத்தை திருடிக்கொண்டு அங்கிருந்து கிளம்ப முயன்றான்.

இதனை கண்டுபிடித்த ஸ்காட், டெய்லரிடம் எடுத்த பணத்தை திரும்ப கொடுக்குமாறு கேட்டுள்ளார். உடனே அந்த டெய்லர் எதிர்பாராத நேரத்தில் அங்கிருந்த பீர் பாட்டிலை கொண்டு ஸ்காட் முகத்தில் ஓங்கி அடித்துள்ளான்.

இதில் முகம் முழுவதும் கிழிந்து ரத்தம் வெளியற ஆரம்பித்துள்ளது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஸ்காட்டிற்கு முகத்தில் 14 தையல்கள் போடப்பட்டன.

மேலும், திருமணத்தில் கலந்துகொள்ள வேண்டாம் எனவும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். ஆனால் அதனை பொருட்படுத்தாத ஸ்காட், அதிகாலை 6 மணிக்கு மருத்துவமனையில் இருந்து வெளியேறி திருமணத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு அவருடைய முகத்தை பார்த்த மணமகள் அதிர்ச்சியில் அழ ஆரம்பித்துள்ளார்.

இந்த சம்பவம் தன் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று என ஸ்காட் கூறியுள்ளார். மேலும், அன்றைய தினம் மணப்பெண்ணை விட தனக்கு தான் முக ஓப்பனை செய்ய நீண்ட நேரம் எடுத்துக்கொண்டது எனவும் கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட டெய்லருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், மூன்று மாதத்திற்குள் 1,000 டொலர்கள் இழப்பீடு செலுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.