எவரெஸ்ட் சிகரத்தில் 2 வாரத்தில் 10 பேர் உயிரிழப்பு!

உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏற முயன்றவர்களில் கடந்த 2 வாரத்தில் மட்டும் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்கு தற்போது பருவகாலம் என்பதால், உலகின் பல பகுதிகளில் இருந்தும் மலையேற்ற வீரர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

நேபாள அரசு அதிகளவிலானோருக்கு அனுமதி கொடுத்திருப்பதால் அங்கு வீரர்களின் கூட்டம் அலைமோதிய வண்ணம் உள்ளது.

மேலும் பிராணவாயு பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதால், கடந்த வாரம் இந்தியாவைச் சேர்ந்த 4 பேரும் அமெரிக்கா, ஆஸ்திரியா மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த வீரர்களும் உயிரிழந்தனர்.

2 தினங்களுக்கு முன் அயர்லாந்தைச் சேர்ந்த வீரர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்தார். நேற்றைக்கு முன்தினம் இங்கிலாந்தைச் சேர்ந்த இரு வீரர்கள் பனிச்சரிவில் விழுந்து உயிரிழந்தனர்.

இந்த வீரர்கள் அனைவரின் உடலையும் மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நேரில் பார்த்த ஐதராபாத் மாநிலத்தை சேர்ந்த அமோக் துக்ராம் (20) கூறுகையில், உலகின் ஏழு கண்டங்களிலும் உள்ள உயர்ந்த சிகரங்களின் உச்சியை அடைந்து என் நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என நான் விரும்புகிறேன்.

ஏற்கனவே ஆப்பிரிக்காவில் உள்ள கிளிமஞ்சாரோ மலை உச்சியை ஏறிட்டேன். இதற்கு தேவையான பண வசதி என்னிடம் இல்லாத நேரத்திலும் கூட, சில அதிகாரிகள் எனக்கு உதவுவதால், ஏப்ரல் 6ம் திகதி எவரெஸ்ட் சிகரத்திற்கான பயணத்தை ஆரம்பித்தேன்.

அந்த சமயத்தில் மோசமான வானிலை காரணமாக என்னுடைய குழுவை சேர்ந்த இரண்டு பேர் கண்முன்னே உயிரிழந்தனர்.

ஆனால் அது எனக்கு ஒரு தடையாக இல்லை. தொடர்ந்து முன்னேறி மே மாதம் 22ம் திகதி காலை 9.22 மணிக்கு அதன் உச்சியை அடைந்தேன் என கூறியுள்ளார்.