பூதகரமாகும் பூர்விகா மொபைல் விவகாரம் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு..?

கன்னியாகுமரி மாவட்டம் புன்னக்காட்டுவிளை பகுதியைச் சேர்ந்தவர் வி.கோபாலகிருஷ்ணன்.

இவர் தக்கலை பூர்விகா மொபைல்ஸிலிருந்து ரூ.4 ஆயிரத்து 500 மதிப்பிலான, 2 சிம் கார்டு வசதி கொண்ட செல்போனை வாங்கியுள்ளார்.

ஓராண்டு உத்தரவாதம் உள்ள அந்த போன் வாங்கிய போதே 1 சிம் செயல்படாமல் இருந்தது. இது குறித்து கடையில் தெரிவித்தபோது, அவர்கள் நாகர்கோவிலில் உள்ள பழுது நீக்கும் மையத்தில் சென்று சரிசெய்து கொள்ளுமாறு கூறியுள்ளனர்.

பழுதுநீக்கும் மையத்தை அணுகிய போது அவர்கள் பழுதுநீக்குவதற்கு கட்டணமாக ரூபாய் 450 வாங்கியுள்ளனர். 10 நாள்களுக்கு பின்னர் சென்று செல்போனை கேட்ட போது போனை சரிசெய்ய முடியாது என்றும், செல்போன் நிறுவனத்துக்கு அனுப்பி பணம் பெற்றுக்கொள்ளுமாறு கூறியுள்ளனர்.

மேலும் அவரது செல்போனில் இருந்து மற்றொரு சிம் கார்டும் செயல் இழந்துள்ளது. இதனால் மன வேதனை அடைந்த கோபாலகிருஷ்ணன் இது குறித்து நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி ஆர்.நாராயணசாமி, உறுப்பினர்கள் சங்கர், எஸ்.சரஸ்வதி ஆகியோர் பூர்விகா மொபைல் விற்பனை நிறுவனம் மற்றும் பழுதுநீக்கும் மையம் மற்றும் செல்பேசி உற்பத்தி நிறுவனத்தின் சேவை குறைபாட்டினை சுட்டிக்காட்டி பாதிக்கப்பட்ட கோபாலகிருஷ்ணனிடமிருந்து செல்போனை பெற்றுக்கொண்டு அதன் விலை ரூபாய் 4 ஆயிரத்து 500, பழுதுநீக்கும் மையத்தில் பெற்ற ரூபாய் 450ஐ திரும்ப வழங்க உத்தரவிட்டனர்.

மேலும் அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடாக ரூபாய் 5 ஆயிரமும், வழக்கு செலவுத் தொகையாக ரூபாய் 3 ஆயிரமும் 1 மாதத்துக்குள் வழங்க வேண்டுமென்றும் கால தாமதம் ஏற்பட்டால் அத்தொகைக்கு 6 சதவீத வட்டியும் வழங்கப்படவேண்டும் என உத்தரவிட்டனர்.