அ.தி.மு.க, பா.ம.க கட்சிகளை விமர்சித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி பொருளாளர்!! குவிக்கப்படும் போலீசார்!!

அ.தி.மு.க, பா.ம.க ஆகிய கட்சிகளை சமூக வளைதளங்களில் கடுமையாக விமர்சனம் செய்த, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பிரமுகரைக் கைதுசெய்ய போலீஸார் தீவிரமாக முயன்றுவருகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் 18-ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற்ற போது செந்துறை அருகே உள்ள பொன்பரப்பியில் இரு கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது.

அப்போது ஒரு சிலரின் வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. இந்த நிலையில் அரியலூர் மாவட்ட பகுதியை சேர்ந்த சிலர் ஒரு சமூகத்தினரை பற்றி இழிவாக பேசி சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது வீடியோ வெளியிட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் பா.ம.க.வினரை இழிவாக பேசி வீடியோ ஒன்று வெளியிட்டவரை கைது செய்யக்கோரி மீன்சுருட்டி காவல் நிலையம் முன்பு பா.ம.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள சிறுகடம்பூர் கிராமத்தை சேர்ந்த செந்துறை ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் தீரவளவன் என்பவர் அண்மையில் அ.தி.மு.க. மற்றும் பா.ம.க. குறித்து மோசமாக விமர்சனம் செய்து கலவரம் ஏற்படுத்தும் வகையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும், வீடியோ காட்சிகளையும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இவர் அறிவாளை கையில் பிடித்து கொண்டு எடுக்கப்பட்ட படங்களையும் பதிவிட்டு மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனால் அப்பகுதியில் இரு சமூகத்தினரிடையே மோதல் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சிறுகடம்பூர் கிராம நிர்வாக அதிகாரி இரும்புலிக்குறிச்சி காவல்நிஉலயத்தில் தீரவளவன் மீது புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள தீரவளவனை தேடி வருகின்றனர். இந்த நிலையில் சிறுகடம்பூர் பகுதியில் கலவரம் ஏற்படாமல் இருக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே சேலம் அருகே வாட்ஸ் அப்பில் அவதூறு பரப்பியது தொடர்பாக விடுதலை சிறுத்தை தொண்டரை காவல்துறையினர் கைது செய்தனர்.