இப்படியும் போலீஸ்க்காரர் உள்ளாரா?? ரியல் ஹீரோ!

தெலுங்கான மாநிலம் கர்னிநகர் மாவட்டத்தில் ஜமீக்குந்தா கிராமத்தை சேர்ந்த மதன் மற்றும் ரவி ஆகிய இருவரும் 60 அடி ஆழ கிணற்றை சுத்தம் செய்வதற்காக கிணற்றுக்குள் இறங்கியுள்ளனர். குறுகிய கிணற்றின் ஆழமான பகுதி என்பதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இருவரும், உதவி கேட்டு அலறல் சத்தம் போட்டுள்ளனர்.

அவர்களின் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தீயணைப்பு துறையினர் அங்கு வருவதற்கு காலதாமதமாகி உள்ளது.

இந்தநிலையில் அங்கு கூடியிருந்த பொதுமக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துக்கொண்டிருந்தனர். அப்போது சுஜான் என்கிற போலீசார் கயிற்றின் உதவியுடன் தானே கிணற்றுக்குள் இறங்க ஆரம்பித்துள்ளார். கிணற்றுக்குள் என்ன பிரச்னை என்றே தெரியாமல் தனது உயிரை பணயம் வைத்து ஹீரோ போல் கிணற்றிற்குள் இறங்கியுள்ளார்.

இதனையடுத்து அவர்கள் இருவரையும் பத்திரமாக காப்பாற்றி மேலே தூக்கியுள்ளார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சுஜான், உள்ளே சிக்கிக்கொண்ட இருவருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட ஆரம்பித்துள்ளது. ஆனால் அங்கிருந்த பொதுமக்கள் கயிற்றின் மூலம் உள்ளே இறங்குவதற்கு தயக்கம் காட்டினார்கள்.

அதனால் தான் தாமதிக்காமல் உடனடியாக நானே கிணற்றுக்குள் இறங்கினேன். அந்த சமயத்தில் தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்தனர். 3 பேர் கிணற்றுக்குள் இறங்கி அவர்களை பத்திரமாக வெளியில் மீட்டெடுத்தோம் என கூறினார்.