ஸ்ரீலங்கன் விமானத்தினுள் குர்ஆன் வாசித்தமையினால் குற்ற விசாரணை பிரிவினர் தன்னை கைது செய்து விசாரணை மேற்கொண்டதாக பயணி ஒருவர் வெளியிட்ட வட்ஸ்அப் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த பதிவு தொடர்பில் தற்போது ஸ்ரீலங்கன் விமான சேவை அறிக்கை ஒன்றை வெளியிட்டு விளக்கமளித்துள்ளது.
அந்த அறிக்கைக்கமைய கடந்த 23ஆம் திகதி அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கை நோக்கி பயணித்த UL-605 என்ற விமானத்தில் பயணித்த பயணி ஒரு வகையான மன அழுத்தத்தில் காணப்பட்டார். குறித்த குற்றச்சாட்டு முன்வைத்த இஸ்லாமிய பயணி மத ரீதியான விடயங்களை கலந்துரையாடியுள்ளார் என ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறித்த சந்தர்ப்பத்தில் விமானத்தில் பயணிகளுக்கு உணவு வழங்க சென்ற ஊழியர்கள், குற்றச்சாட்டை முன்வைத்த பயணியின் செயற்பாட்டினால் மற்ற பயணிகள் சிரமத்திற்குள்ளாகுவதனை அவதானித்துள்ளனர்.
சர்வதேச விமான சேவைகளில் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறைக்கமைய விமானத்தினுள் இவ்வாறான விடயங்கள் இடம்பெற்றால், அதனை ஊழியர்கள் விமான நிலைய அதிகாரிகளிடம் அறிவிக்க வேண்டும்.
அந்த முறையின் கீழ் விமானத்தினுள் இந்த பயணியின் செயற்பாடு குறித்து ஸ்ரீலங்கன் விமான சேவை தகவல் வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பிற்கமைய விமான நிலைய அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளினால் அந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு குறித்த பயணியிடம் விசாரணை மேற்கொண்டு வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்துள்ளனர். அதன் பின்னர் அவரை விமான நிலையத்தில் இருந்து செல்ல அனுமதித்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதல் காரணமாக விமானங்களில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பு தொடர்பில் ஸ்ரீலங்கன் விமான சேவை தீவிர அவதானத்தை செலுத்தியுள்ளது.
மெல்பேர்ன் நகரில் இருந்து இலங்கை நோக்கி பயணித்த விமானத்தில் 231 பயணிகள் பயணித்துள்ளனர். அவர்களில் 5 பேர் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்கள் என ஸ்ரீலங்கன் விமான சேவை தெரிவித்துள்ளது.
விமானத்தில் பணியாற்றும் 12 ஊழியர்களில் ஒருவரேனும் மத அடிப்படையில் பயணிகளுக்கு சேவை வழங்குவதாக எந்தவொரு பயணியும் இதுவரையில் முறைப்பாடு செய்ததில்லை.
சர்வதேச விமான சேவையான ஸ்ரீலங்கன் விமான சேவை தொடர்ந்து தங்கள் பயணிகளின் பாதுகாப்பு தொடர்பில் அவதானம் செலுத்தும் என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.