சசிகலா வழக்கில் நீதிமன்றம் புதிய உத்தரவு!

சென்னை எழும்பூர் நீதிமன்றம், சசிகலா மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கின் விசாரணையை, ஜூலை 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து இன்று உத்தரவிட்டுள்ளது.

வெளிநாட்டில் இருந்து ஜெ.ஜெ. டிவிக்கு உபகரணங்கள் வாங்கியதில் அந்நிய செலாவணி மோசடி நடைபெற்றுள்ளது என தொடரப்பட்ட வழக்கில் சசிகலா, பாஸ்கரன் நேரில் ஆஜராக சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. ஆனால் சசிகலா காணொளி காட்சி மூலம் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அனுமதி பெற்றார்.

இந்நிலையில் இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், சசிகலா தரப்பில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு நகல் எழும்பூர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதனை அடுத்து சசிகலாவிடம் கேள்விகள் கேட்க எளிமையாக வழக்கு ஆவணங்களை தமிழில் மொழிபெயர்ப்பதற்காக விசாரணையை ஜூலை 16-ஆம் தேதி வரை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

வருகின்ற ஜூலை 16-ஆம் தேதி சசிகலா காணொளி காட்சி மூலமாகவும், பாஸ்கரன் நேரிலும் விசாரணைக்கு ஆஜராவதற்கான தேதி முடிவு செய்யப்படும் என தெரிகிறது.