வீட்டு வேலைக்கார பெண்ணின் வங்கி கணக்கில் ரூ.700 இருந்தது, 32 மாதங்களில் சொத்து மதிப்பு ரூ.75 லட்சமாக அதிகரித்துள்ள நிலையில் அந்த பெண், அவருக்கு வேலை கொடுத்த சென்னை அரசு அதிகாரி மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
சென்னையில் உள்ள மத்திய அரசு நிறுவனமான பெட்ரோலியம் வெடிபொருள் மற்றும் பாதுகாப்பு அமைப்பில் இணை தலைமை வெடிபொருள் கட்டுப்பாட்டாளராக பணியாற்றியவர் ஏ.கே.யாதவ்.
இவர் இந்த பதவியில் 2015-ம் ஆண்டு ஆகஸ்டு 12-ந்தேதியில் இருந்து 2018-ம் ஆண்டு ஏப்ரல் 7-ந்தேதி வரை பணியில் இருந்தார். பின்னர் அவர் ஓய்வுபெற்றார்.
இந்த காலகட்டத்தில் அவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சி.பி.ஐ.க்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுபற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்தியதில் யாதவ் ரூ.98.89 லட்சம், அதாவது அவரது சட்டபூர்வ வருமானத்தைவிட 311.30 சதவீதம் அதிகமான சொத்து வைத்துள்ளதாக தெரியவந்தது.
ஓய்வுபெறும்போது அவரது சொத்து மதிப்பு ரூ.1.37 கோடி. அவை அவரது பெயரிலும், அவரது வீட்டில் வேலை செய்துவந்த பெண் சரிதா என்பவர் பெயரிலும் இருந்தது. யாதவின் சட்டபூர்வ வருமானம் ரூ.31.76 லட்சம் மட்டும் தான். இதில் அவரது செலவுகள் போக ரூ.98.89 லட்சம் வருமானத்துக்கு அதிகமாக சொத்து உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
சரிதா 2015-ம் ஆண்டு வேலைக்கு சேர்ந்தபோது அவரது வங்கி கணக்கில் ரூ.700 இருந்தது. 32 மாதங்களில் அவரது அசையா சொத்துகள் ரூ.44.35 லட்சமாகவும், அசையும் சொத்துகள் ரூ.30.94 லட்சமாகவும் இருந்தது.
இதில் வங்கியில் இருப்பு தவிர 2 இடங்களில் வீட்டுமனை, ஒரு வீடு, 547 கிராம் தங்கம் ஆகியவையும் அடங்கும். ஆனால் சரிதாவின் வருமானம் மாதம் ரூ.8,300 சம்பளம் வீதம் இந்த காலகட்டத்தில் மொத்தம் ரூ.2.66 லட்சம் மட்டுமே.
இது தவிர இதர சொத்துகள் ஏ.கே.யாதவ் மற்றும் அவரது மனைவி புஷா பெயரிலும் இருந்தன. இதிலிருந்து யாதவ் தனது வீட்டு வேலைக்கார பெண் பெயரில் சொத்துகளை வாங்கி தப்பிக்க நினைத்தது தெரியவந்தது. யாதவின் ஏஜெண்டாக டி.வி.கே.குமரேசன் என்பவர் செயல்பட்டு வந்ததும் சி.பி.ஐ. விசாரணையில் தெரிந்தது.
இதனைத்தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் ஏ.கே.யாதவ், குமரேசன், சரிதா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.