அசைவப்பிரியர்களாக மாறிக்கொண்டே வரும் குரங்குகள்!

மனிதர்களுக்கு நெருங்கிய உறவினர்களாக கருதப்படும் சிம்பன்சி இன குரங்குகள், மனிதர்களை போலவே செயல்படுவதாக தொடர்ந்து தகவல்கள் கிடைத்து வரும் நிலையில், அவை அசைவப்பிரியர்களாக மாறி வருவதை சுவிஸ் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

சமீபத்தில் கினியாவின் மழைக்காடுகளில் இந்த அபூர்வ நிகழ்வை அவர்கள் கண்டனர்.

சிம்பன்சிக்கள், முக்கியமாக பெண் மற்றும் குட்டி சிம்பன்சிகள் அதிக அளவில் ஈர மண்ணைத் தோண்டி நண்டுகளை பிடித்து உண்பதை வீடியோ கெமராவில் பதிவு செய்துள்ளனர் அவர்கள்.

நண்டுகளில் போதுமான அளவில் கொழுப்பு அமிலங்களும், சோடியம் மற்றும் கால்சியம் போன்ற நுண் சத்துக்களும் இருப்பதை அறிந்துள்ளன சிம்பன்சிகள்.

இந்த சத்துகள் குழந்தை பெற்ற தாய்மாருக்கும் குட்டிக் குழந்தைகளுக்கும் மிகவும் அவசியமானவை என்பது குறிப்பிடத்தக்கது.

குரங்குகள் மனிதர்களின் முன்னோடிகள் என கருதப்படும் மனித பரிணாம வளர்ச்சியில், கடல்வாழ் விலங்குகளின் பங்கு மிகவும் முக்கியமானதாக இருந்ததையே இந்த நிகழ்வு நமக்கு நினைவூட்டுகிறது.

சுமார் இரண்டு மில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஹோமோ செப்பியன்களின் முன்னோர்கள் கடல் ஆமைகளையும், முதலைகளையும் மீன்களையும் உண்டு வாழ்ந்துள்ளனர்.

தொடர்ந்து இந்த உணவுகளை உண்ணுதல் ஆதி மனிதனின் மூளை வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருந்ததாக கருதப்படுகிறது.

தற்போது சிம்பன்சிகள் நண்டுகளை உண்ணுவதைப் பார்க்கும்போது, சிம்பன்சிகள் மனிதனுக்கு நெருக்கமானவை என்னும் பரிணாம அறிவியலை உறுதி செய்யும் விதத்தில் அது அமைந்துள்ளது எனலாம்.