கிழக்கு மாகாண முகாமைத்துவ உதவியாளர் பரீட்சை நடைபெற்ற போது இன விகிதாசார அடிப்படையில் தெரிவு செய்ய கூடாது எனவும் திறமை அடிப்படையில் தெரிவு செய்ய வேண்டும் என திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் பெருஞ்சேவை ஆணைக்குழுவிற்கு கட்டளை பிறப்பித்திருந்தார்.
திறமை அடிப்படையில் சித்தி அடைந்திருந்த போதும் இன விகிதாசார அடிப்படையில் தெரிவு செய்யப்படுவதால் இரு தமிழ் விண்ணப்பதாரிகளுக்கு நியமனம் கிடைக்கப்பெறவில்லை.
உடனடியாக குறித்த இரு தமிழ் விண்ணப்பதாரிகளும் திருகோணமலை மேல் நீதிமன்றில் ஆணை வழக்கு தாக்கல் செய்தனர்.
திறமைப் புள்ளி அடிப்படையில் மட்டுமே நியமனங்களை தெரிவு செய்து நீதிமன்றில் பெயர் பட்டியலை தாக்கல் செய்யுமாறு ஆளுநருக்கு நீதினமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
1 – 186 விண்ணப்பதாரிகளின் பெற்ற புள்ளி விபரங்களை நேற்று கிழக்கு மாகாண பொது சேவை ஆணைக்குழு நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்தது.
திறமை அடிப்படை 1 – 186 விண்ணப்பதாரிகளின் நியமனக் கடிதங்களை இன்று நீதிமன்றில் தாக்கல் செய்யுமாறு நீதிமன்று உத்தரவு பிறப்பித்தது.
அதனை அடுத்து இன்று பகிரங்க நீதிமன்றில் கிழக்கு மாகாண நிர்வாகத்தினரால் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமுல்படுத்தி 186 விண்ணப்பதாரிகளின் விண்ணப்ப கடிதங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அதில் வழக்கு தகாக்கல் செய்த தமிழ் விண்ணப்பதாரிகளும் திறமை அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கும் நியமனக் கடிதங்கள் வழங்கப்படுவதாக கிழக்கு மாகாண நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேற்குறித்த 186 பேரும் நீதிமன்ற உத்தரவில் கிழக்கு மாகாணத்திற்குரிய முகாமைத்துவ உதவியாளர்களாக நியமனம் செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு உதவிச் செயலாளருக்கு அரசியல் அமைப்பு சட்டத்தையும், நாடாளுமன்ற சட்டத்தை மட்டுமே பின்பற்ற வேண்டும். தான்தோன்றித்தனமான அரச கூட்டமைப்புகளை சட்டத்திற்கு முரணான வகையில் பின்பற்ற கூடாது என கிழக்கு மாகாண பொது சேவை ஆணைக்குழுவிற்கு அறிவுறுத்துவதாக நீதிமன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.