கடந்த மே 23 ஆம் தேதி இந்தியா முழுவதும் தேர்தல் முடிவு எப்படி இருக்குமோ என்ற பரபரப்பு. ஆனால் தமிழகத்திலோ திமுகவினருக்கு பரபரப்புடன் மேலும் படபடப்பை உருவாக்கும் விதமாக வந்து சேர்ந்தது திமுக பொருளாளர் துரைமுருகன் உடல்நிலை குறித்த செய்தி. அன்று அதிகாலை திடீரென சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற தகவல் பரபரப்பாக பேசிக்கொண்டு இருக்கும் போதே, அன்றே சிகிச்சை பெற்று மாலையில் வீடு திரும்பினார்.
திமுக பெற்ற வெற்றியை கொண்டாடும் விதமாக, அன்றைய தினம் மாலை திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அது தான் அவர் அனைவரும் அறிந்து இறுதியாக வெளியே வந்தது. அதன்பிறகு அவர் அப்பல்லோ மருத்துவமனைக்கு தொடர் சிகிச்சைக்காக சென்று வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
துரைமுருகனுக்கு சிறுநீர் தொற்று மற்றும் காய்ச்சலும் வந்துள்ளது. காய்ச்சலின் அளவு குறையாமல் சீரற்ற நிலையில் இருப்பதால் அவர் அப்பல்லோ மருத்துவமனையில் தனி அறை எடுத்துகொண்டு அங்கே சென்று சிகிச்சை பெற்று வருகிறார் துரைமுருகன்.
திமுகவின் தேர்தல் வெற்றியை கொண்டாட முடியாத வேதனையில் துரைமுருகன் இருப்பதாகவே கூறப்படுகிறது. தனது மகன் வேட்பாளராக போட்டியிட்ட வேலூர் தொகுதியின் தேர்தல் ரத்து செய்யப்பட்டதில் இருந்தே திமுகவினர் மீது ஒரு வித வருத்தத்துடன் தான் துரைமுருகன் இருந்துள்ளார். தேர்தல் ரத்து செய்யப்பட காரணமே அதிமுக வேட்பாளரின் சமூகத்தை சேர்ந்த திமுக முக்கிய புள்ளிகள் தான் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
ஏற்கனவே இதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட துரைமுருகனுக்கு கட்சி நிர்வாகிகள், நண்பர்கள் சிலர் பேசி தைரியம் கொடுத்தனர். இருப்பினும் சீனியர் நிர்வாகியான தனக்கே இப்படி துரோகம் செய்துவிட்டார்களே என்ற கவலையோடு தான் இருக்கிறார்.
இதற்கிடையே தான் சிறுநீர் தொற்று ஏற்பட்டு, அதோடு காய்ச்சலும் அதிகமாகி சிகிச்சை பெற்று வருகிறார் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் எதுவுமே வரவில்லை. அதிகம் வெளியே வராத தகவல் அறிந்து கடந்த ஒரு வாரமாக அவரது ஆதரவாளர்கள் உடல் நிலை பற்றி அவரது மகன் கதிர் ஆனந்திடம் விசாரித்து வருகின்றனர். அவர்களிடம் கதிர் ஆனந்தே பேசி சமாளித்து வருகிறார்.
துரைமுருகன் திமுக நிகழ்ச்சிகளில் பங்கெடுக்காதது, அவரது சமுகத்தை சார்ந்த திமுகவினருக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் திமுகவை தமிழகத்தில் வளர்த்ததில் பெரும் பங்கு வன்னியர்களுக்கும் உண்டு. ஆனால், வன்னியர்களின் அதிகாரம் தொடர்ச்சியாக திமுகவில் குறைக்கப்பட, இறுதி நம்பிக்கையாக இருந்த வீரபாண்டி ஆறுமுகம் மறைந்துவிட, துரைமுருகன் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் அளவில் எஞ்சி இருந்தார். இப்போது அவரையும் திட்டமிட்டு, முடக்கிவிட்டார்களே என்ற கவலையில் உள்ளார்கள்.