எயிட்ஸ் வைரஸ் தொற்றுக்குள்ளான தனது மனைவியை கணவர் படுகொலை செய்த விபரீத சம்பவம் பாகிஸ்தானில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.
கடந்த சில வாரங்களாக அந்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட எயிட்ஸ் நோயைக் கண்டறிவதற்கான பரிசோதனையின் போது சுமார் 700 பேருக்கு எயிட்ஸ் வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டதையடுத்து அந்நாட்டில் மக்களிடையே கடும் பீதி நிலவுகிறது.மேற்படி எயிட்ஸ் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் பலர் சிறுவர்களாவர்.
இந்நிலையில் சிந்து மாகாண நகரான லர்கானாவிற்கு அருகிலுள்ள கிராமமொன்றில் வசிக்கும் நான்கு பிள்ளைகளின் தாயாரான 32 வயது பெண்ணுக்கு எயிட்ஸ் வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது பரிசோதனையின் போது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து அவருக்கு திருமணத்துக்கு அப்பாலான காதல் தொடர்பின் மூலமே நோய் ஏற்பட்டுள்ளதாக அவரது கணவர் குற்றஞ்சாட்டி அவரைப் படுகொலை செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது குறித்த நபர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
வைத்தியர்கள் சுத்திகரிக்காத உபகரணங் களை பயன்படுத்துவது மற்றும் அவர்களால் மேற்கொள்ளப்படும் அலட்சியமான சிகிச்சை முறைகள் என்பன காரணமாகவே அந்நாட்டில் எயிட்ஸ் நோய் வேகமாக பரவி வருவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.