புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது :ஆனந்த சங்கரி

புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்பதைப் போன்று பணம், பதவி என்பவற்றின் மூலம் என்னை வாங்கமுடியாது. கடந்த காலத்தையும், சிலர் எனக்குச் செய்த துரோகத்தையும், என்னைத் தோற்கடித்த விதத்தையும் நான் மறக்கத் தயாராக இருக்கின்றேன்.

எவரானாலும் தமிழர் விடுதலைக் கூட்டணியில் வந்து இணையலாம் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆனந்த சங்கரி அழைப்பு விடுத்துள்ளார்.

அவருடனான செவ்வியின் முழு விபரம் வருமாறு :

கேள்வி : உங்களுடைய அரசியல் பயணம் எவ்வாறு ஆரம்பித்தது?

பதில் : அரசியலில் இது எனக்கு 60 ஆவது ஆண்டு. 1959 ஆம் ஆண்டு முதற்தடவையாக கொழும்பு மாநகரசபைத் தேர்தலில் போட்டியிட்டு ஆரம்பித்த என்னுடைய அரசியல் பயணத்தில் இன்றுவரை தொடர்ந்து அனைத்துத் தேர்தல்களிலும் போட்டியிட்டு வருகின்றேன்.

அவற்றின் வெற்றி கண்டதுமுண்டு, தோல்விகளையும் எதிர்கொண்டதுண்டு.பின்னர் இடதுசாரிக் கட்சியான சமசமாஜக் கட்சியிலிருந்து விலக வேண்டிய சூழ்நிலையொன்று ஏற்பட்டது. அப்போது தமிழரசுக் கட்சியும், தமிழ் காங்கிரஸ் கட்சியுமே குறிப்பிட்டுக் கூறக்கூடிய வகையில் பெரிய கட்சிகளாக இருந்தன. 1948 ஆம் ஆண்டில் நாட்டிற்கு சுதந்திரம் கிடைக்கவிருந்த நிலையில், இவ்விரு கட்சிகளும் 1947 ஆம் ஆண்டுத் தேர்தலிலே ஒரே கட்சியாகத்தான் போட்டியிட்டன. ஆனால் பின்னர் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக தமிழரசுக் கட்சி, தமிழ் காங்கிரஸ் கட்சி என்பன இருவேறு கட்சிகளாகப் பிளவுபட்டன. அந்தப் பிளவு பின்னர் கீரியும், பாம்பும் போன்ற பெரும்பகையாக மாறியது.

இப்படி ஆரம்பித்த பிளவினை அடுத்து ஜி.ஜி.பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் காங்கிரஸ் கட்சி படிப்படியாக தனது அங்கத்துவத்தைக் குறைத்து 1970 ஆம் ஆண்டாகும் போது மூன்று பேராகக் குறைந்தது.

ஆனால் அப்போது தமிழ் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்த இடங்களிலெல்லாம் தமிழரசுக் கட்சி வெற்றியடைந்தது. 1970 இல் தமிழ் காங்கிரஸ் கட்சியில் வென்ற மூன்று பேரில் நானும் ஒருவன். அந்தக் காலகட்டத்தில் தமிழரசுக் கட்சி மிகுந்த பலம் பொருந்திய கட்சியாக எழுச்சி பெற்றுவிட்டது,

1970 ஆம் ஆண்டுக் காலப்பகுதி மிக முக்கியமான காலப்பகுதியாகும். அந்த வரலாற்றை முறையாக அறியாதவர்கள் இன்று பலவற்றையும் கூறுகின்றார்கள்.

பல்வேறு பிரச்சினைகளாலும் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தலைமையிலான தமிழரசுக் கட்சியும், ஜி.ஜி.பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் காங்கிரசும் பிளவுபட்டிருந்த காலப்பகுதியில், தமிழ் மக்களின் நலனுக்காகத் தாம் ஒன்றிணைய வேண்டும் என்ற நோக்கில் அனைவரும் பாராட்டத்தக்க விதமாக தந்தை செல்வா ஜி.ஜி.பொன்னம்பலத்தின் வீட்டிற்குச் சென்றார். அப்போது ஜி.ஜி.பொன்னம்பலம் கோபமாக நடந்துகொள்வார் என்று நாங்களனைவரும் எதிர்பார்த்த போதிலும், ஜி.ஜி.பொன்னம்பலமே வாசற்கதவு வரை சென்று தந்தை செல்வாவை வரவேற்று, ‘நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்?” என்று வினவினார்.

அதற்கு செல்வநாயகம் ‘நாங்கள் இப்படியே தொடர்ந்து இருக்கமுடியாது. விரைவில் நாங்கள் ஒன்றிணைய வேண்டும்” என்று குறிப்பிட்டார். உடனேயே ‘நீங்கள் கூறுவது மிகச்சரி. நாங்கள் பிரிந்திருப்பது எமது இனத்தின் அழிவிற்கு உதவியாக அமைந்துவிடும். என்னுடைய கட்சியிலுள்ள அத்தனை பேரையும் உங்களுக்குத் தரத்தயாராக இருக்கின்றேன். எனக்கு காலஅவகாசம் வேண்டும். நான் பின்னர் வந்து இணைந்துகொள்வேன்.

அதன்படி 1972 ஆம் ஆண்டு மே 14 ஆம் திகதி நாம் அனைவரும் ஒன்றிணைவோம் என்று கூட்டமொன்றில் தந்தை செல்வா குறிப்பிட்டார். அதன்படி தந்தை செல்வாவின் தலைமையில் தமிழர் விடுதலைக் கூட்டணி என்று பின்னர் பெயர் மாற்றிக்கொள்ளப்பட்ட தமிழ் ஐக்கிய முன்னணி உருவாக்கப்பட்டமை தமிழ் மக்களின் சரித்திரத்திலேயே மிக முக்கிய நாளாக அமைந்தது. இது தான் தமிழ் ஐக்கிய முன்னணியின் வரலாறு.

கேள்வி : இத்தகைய வரலாற்றைக் கொண்ட உங்களது கட்சியின் தற்போதைய செயற்பாடுகள் எவ்வாறானதாக அமைந்துள்ளன?

பதில் : யாருடனும் ஒப்பிட முடியாத பெருந்தலைவர்கள், தமக்குள் காணப்பட்ட அரசியல் பேதங்களைக் கூட மறந்து உருவாக்கிய தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்கிய போது இடம்பெற்ற கூட்டத்திற்குக் கூட வராதவர்கள் தான் அந்தக் கட்சியை அழிப்பதற்கு முன்நின்கிறார்கள். இரா.சம்பந்தனும், மாவை சேனாதிராஜாவும் இந்தக் கட்சியை அழித்துவிட்டார்கள். இங்கு முக்கியமாகக் குறிப்பிட வேண்டிய விடயம் எதுவென்றால் தமிழரசுக் கட்சியும், தமிழ் காங்கிரஸ் கட்சியும் தற்போது இடம்பெறுவதைப் போன்று பங்காளிக்கட்சிகளாகப் பேரம்பேசி சேரவில்லை. நாங்கள் முழுவதுமாக ஒன்றிணைந்தோம். தற்போது பாராளுமன்றத் தேர்தல் வந்தால், பாராளுமன்றத்தில் எத்தனை ஆசனங்கள் வழங்கப்படும் என்ற அடிப்படையில் கட்சிகள் இணைகின்றன. இது வியாபாரம்.

ஆனால் நாங்கள் உளத்தூய்மையோடு முழுமையாக இணைந்து உருவாக்கிய கட்சி இன்று அல்லோலகல்லோலப்படுகிறது. சரித்திரம் தெரியாதவர்களின் கைகளில் அகப்பட்டு, சிக்கித் திணறுகிறது. தாம் எவ்வாறு பதவிக்கு வந்தோம் என்பதை மறந்துவிட்டு, தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தத் தகுதியற்றவர்கள் போன்று செயற்பட்டு வருவது கவலைக்குரியது.

இந்நிலையில் நான் இருந்த இடத்திலேயே இருக்கின்றேன். கட்சி மாறவில்லை. அவ்வாறிருக்க மாவை சேனாதிராஜாவை முதலில் பாராளுமன்ற உறுப்பினராகப் பிரேரித்ததும், அவரை முன்கொண்டு வருவதற்கு நான் மேற்கொண்ட முயற்சிகளுமே நான் இந்த நாட்டிற்கும், தமிழ் மக்களுக்கும் செய்த துரோகமாக இருக்கும் என்று கருதுகின்றேன்.

கேள்வி : எனினும் தமிழ் அரசியல் தலைவர்கள் தமக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்திக்கொண்டு செயற்படுவது இந்நாட்டில் சிறுபான்மையினத் தமிழ் மக்கள் தமது உரிமைகளை வென்றெடுப்பதற்குத் தடையாகவே அமையும். அந்தவகையில் தமிழ் அரசியல் தலைவர்கள் அனைவரும் தமது சமூகத்திற்காக ஒன்றிணைந்து செயற்பட முன்வராததன் காரணமென்ன?

பதில் : நானும் அதே விடயத்தைத் தான் கூறவருகிறேன். நான் இந்தப் பாவத்தைச் செய்யவில்லை. அமிர்தலிங்கம் மரணமடைந்த போது, அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு நான் வந்திருக்க முடியும். எனினும் எமக்கிடையில் பிளவு ஏற்படக்கூடாது என்ற காரணத்திற்காக அதனை வேறொருவருக்கு வழங்கினேன். ஆனால் தற்போது இந்தப் பிளவிற்குக் காரணமானவராக அவர்தான் இருக்கின்றார். நான் ஒரு சட்டத்தரணி.

ஆனால் அதைவிட்டு நான் முழுநேர அரசியலில் ஈடுபட்டேன். அவ்வாறிருந்தும் இவர்கள் மேற்கொண்ட பொய்ப் பிரசாரங்களினால் இன்று பின்னடைவைச் சந்தித்திருக்கிறேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே ஒரு மோசடியாக உருவாக்கப்பட்ட கட்சியாகும்.

கேள்வி : இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சமரசமொன்றிற்குத் தயாராக இருந்தால் நீங்களும் அதற்குத் தயாரா?

பதில் : புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்பதைப் போன்று பணம், பதவி என்பவற்றின் மூலம் என்னை வாங்கமுடியாது. என்னுடைய கரங்கள் இதுவரை கறைபடியாதவை. நாங்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்கியதைப் போன்றே மீண்டும் இணைவோம். எவரானாலும் தமிழர் விடுதலைக் கூட்டணியில் வந்து இணையலாம். கடந்த காலத்தையும், சிலர் எனக்குச் செய்த துரோகத்தையும், என்னைத் தோற்கடித்த விதத்தையும் நான் மறக்கத் தயாராக இருக்கின்றேன்.

 நீங்கள் வந்து மீண்டும் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணையுங்கள். புதிய முறைப்படி நியமனத்தை வழங்குவோம். இந்த அடிப்படையிலேயே சி.வி.விக்னேஸ்வரனை தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணையுமாறு கேட்டேன். எனினும் அவரது நிபந்தனைகள் பொருந்தவில்லை.